தொட்டில் சபதம், ரெயிலுக்கு நேரமாச்சு, சின்னக்காளை ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பாரதிமோகன் தயாரித்து வரும் புதிய படம் அம்பு குறி. சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திகில் படமான அம்பு குறியில் நாயகியாக நடிகை அங்கீதா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவா என்ற புதுமுக நாயகன் நடிக்கிறார். இவர்களுடன் காதல் தண்டபாணி, நெல்லை சிவா, கணேஷ், ஆர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார்.
தாய் - தந்தையை இழந்த ஒரு பெண், உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். அந்த உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் அம்புக்குறியிட்ட கடிதம் வருகிறது. மறுநாள், கடிதம் கிடைக்கப்பெற்றவர் கொலை செய்யப்படுகிறார். இப்படி வரிசையாக அந்த பெண்ணின் உறவினர்கள் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார், கொலைக்கான காரணங்கள் என்ன? என்பதே படத்தின் சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்!
வி.இண்டர்நேஷனல் சார்பில் பாரதிமோகன், ஏ.வி.யுவராஜ் பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.