ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் |

விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லீக் ஆன படத்தை பதிவிறக்கம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து திரைத்துறையில் முதல் ஆளாக நடிகர் சிவகார்த்திகேயன், குரல் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இப்போது பலரும் ஜனநாயகனுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு
நடிகை குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், ''திருட்டுத்தனம் என்பது பொழுதுபோக்கு அல்ல. இது ஒரு திட்டமிடப்பட்ட திருட்டு. இதில் ஈடுபடுபவர்கள் எந்தவொரு குற்றவாளிக்கும் குறைந்தவர்கள் அல்ல; மற்ற குற்றங்களைப் போலவே இவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஜனநாயகன் படத்தின் கசிவு என்பது, தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, பல ஆண்டுகால உழைப்பைக் கொடுத்து ஒரு அர்த்தமுள்ள படைப்பை உருவாக்கிய ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்பக் கலைஞருக்கும், தொழிலாளிக்கும் இழைக்கப்பட்ட ஒரு கொடூரமான துரோகம். ஒரு சட்டவிரோத 'கிளிக்' வாழ்வாதாரங்களை அழிக்கிறது, கனவுகளைச் சிதைக்கிறது, ஒட்டுமொத்தத் திரையுலகையும் முடக்குகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது. நீங்கள் உண்மையாகவே சினிமாவை நேசிப்பவராக இருந்தால், திருட்டுத்தனத்தை அடியோடு நிராகரியுங்கள். அவ்வளவுதான். படைப்பாளிகளுடன் நில்லுங்கள். நேர்மையுடன் நில்லுங்கள். கடின உழைப்புடன் நில்லுங்கள். திரையுலகிற்கு ஆதரவாக நில்லுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
விஷால்
நடிகர் விஷாலின் அறிக்கை: நமது 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். இவ்வளவு உழைப்பும், அர்ப்பணிப்பும் வீணடிக்கப்படுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்தவரை இது மிகக் கடினமான நிதி சார்ந்த மற்றும் முக்கியமான முடிவு என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் ஒரு ரசிகனாக எனது உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்புகிறேன். இந்தப் படம் அவ்வளவு சர்ச்சைக்குரியது என்று நான் நினைக்கவில்லை, இருப்பினும் மதிப்பிற்குரிய சென்சார் போர்டு அவர்களுக்குரிய காரணங்களை வைத்திருக்கலாம். உங்கள் திரைப்படத்தை விரைவில் முறையான வழியில் காண முடியும் என்று நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில், 'திருட்டுத்தனமாகப் படம் பார்ப்பதை ஆதரிக்காதீர்கள். திறமைக்கும் உழைப்பிற்கும் மதிப்பளியுங்கள். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் ரத்தமும் வியர்வையும் கலந்த பெரும் உழைப்பு இருக்கிறது. வேதனையாக உள்ளது' எனப் பதிவிட்டுள்ளார்.
போஸ் வெங்கட்
நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் தனது பதிவில், 'ஜனநாயகன் திரைப்படம் முழுமையாக இன்டர்நெட்டில் வெளியானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. யார் இதனை செய்து இருந்தாலும் கடுமையான தண்டனை தர வேண்டும். சென்சாரில் இருக்கும் ஒரு திரைப்படம் எப்படி வெளியில் வர முடியும். ஒட்டுமொத்த திரையுலகமும் இதை கண்டிக்க வேண்டும். தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும். இதையும் அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது தவெக' எனப் பதிவிட்டுள்ளார்.
மோகன் ஜி
இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், 'எதிர்பார்ப்பு இல்லாத ஓர் திரைப்படம், திரையரங்கத்தில் வெளியாவதற்கு முன் இணையத்தில் கசிந்தாலே அதை உருவாக்கியவர்கள் கதிகலங்கி போவார்கள். இவ்வளவு பெரிய படத்தின் காட்சிகள் இப்படி வெளியாவது, உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி, மன அழுத்தத்தை உருவாக்கும். அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து இப்படி பரப்புவதை நிறுத்துங்கள்.. அரசியல்' எனப் பதிவிட்டுள்ளார்.
கேஆர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கோதண்டராமைய்யா (கே ஆர்) டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரில், ''சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். தேர்தலுக்கு பிறகாவது இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முதலீடு செய்த அனைவருக்கும் போட்ட பணத்தை எடுத்து தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக்கூடிய சண்டைக்காட்சி மட்டும் இணையத்தில் லீக் ஆனதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மொத்த படமும் தரமான பிரிண்டாக இணையதளங்களில் வெளியாகியிருப்பதாகவும் அதை பல்லாயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வரும் தகவல்கள் பேரிடியாக இருக்கிறது.
இது விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்களை பொறுத்தவரை எந்த வடிவத்திலும் தேடித்தேடி பார்ப்பது அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் அது முதலீடு செய்து தயாரிப்பாளருக்கு பெரும் திண்டாட்டமாக இருக்கும் என்பது யாருக்கும் புரிவதில்லை. இப்போது திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டிருப்பதால் ஒட்டு மொத்த திரைப்படத்துறைக்கும் பேரிழப்பு. சினிமாவுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுனாமி, கொரோனா போல பைரஸியும் திரைப்படத்துறைக்கு ஒரு பேரிடர் என்றால் மிகையாகாது.
எனவே காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து இணையதளம் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியாவிலும் இந்த படத்தை யாரும் பகிர்ந்து விடாதபடி தடுக்க வேண்டும் என்றும், இந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்படத்துறை சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: கே.வி.என் நிறுவனத்தால் ரூ. 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் திருட்டுத்தனமான வெளியீட்டைக் கண்டு மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைகிறோம். ஆரம்பத்தில் சில காட்சிகள் கசிந்ததாகத் தகவல் வந்த நிலையில், தற்போது முழுத் திரைப்படமும் கசிந்துள்ளது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இணையக் கசிவு, தியேட்டர் மற்றும் பிற தளங்கள் மூலம் ஈட்ட வேண்டிய வருவாயை கடுமையாகப் பாதித்துள்ளது. பெரும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் மற்றும் குழுவினரின் உழைப்பைப் பற்றி கவலைப்படாத சில சமூக விரோத சக்திகளால் ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் சைபர் செல் பிரிவினர் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இணையத்தில் கிடைக்கும் முழுப் படம் மற்றும் அதன் காட்சிகளை போர்க்கால அடிப்படையில் நீக்கி தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், சட்டவிரோதமாகப் படத்தைக் கசியவிட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க மத்திய புலனாய்வுத் துறையை (சிபிஐ) நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் இத்தகைய இணைப்புகளைப் பகிர வேண்டாம் என்றும், பதிவிடப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்குக் கொடுக்கும் மரியாதையாக இதைச் செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவிற்குச் சிறந்த காலம் அமையும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேவிஎன் எச்சரிக்கை
ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில், ''செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலிட் செய்யுங்கள். விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் சிலர் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகன் படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள், பார்ப்பவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிரம், டெலிகிராம் மூலம் ஜனநாயகன் படத்தை பகிர்வோரை கண்டுபிடிப்பது எளிது. சமூகவலைதளம் மூலம் வரும் ஜனநாயகன் படத்தை பகிரவோ, செல்போனில் சேமித்தோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு டிஜிட்டல் செயல்பாடும் கண்காணிக்கக்கூடியது. இதில் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக, நாங்கள் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளோம்.
புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வித விதிவிலக்குமின்றி, இந்த குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா
‛‛இதயத்தை நொறுக்கும் செயல், இது மிகவும் அநீதியானது. ஒரு முழு குழுவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இப்படி சிதைக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரிடமும் நான் நேர்மையுடன் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து ஜனநாயகன் திரைப்படத்தை பைரசியில் பார்க்காதீர்கள், பகிராதீர்கள் அல்லது அதைப் பற்றி இங்கே விவாதிக்காதீர்கள். அவர்களின் கடின உழைப்பிற்கு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களின் பக்கம் நிற்கிறேன், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது!" என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.