பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
நடிப்பு, பாட்டு, தயாரிப்பு, இயக்கம், எழுத்து, ஓவியம் என கலையுலகின் சகலமும் அறிந்த “அஷ்டாவதானி” நடிகை பி பானுமதியின் 17வது நினைவு தினம் இன்று. அவரைப்பற்றிய தொகுப்பு இதோ....
* தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஆளுமையான இவர், அண்ணாதுரையால் “நடிப்புக்கு இலக்கணம்” என போற்றப்பட்டவர்.
* தெலுங்கு திரையுலகின் முதல் பெண் “சூப்பர் ஸ்டார்” என்ற அந்தஸ்துக்குரிய இவர், 1925 செப்டம்பர் 07ம் தேதி, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்திலுள்ள தொட்டாவரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
* சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பி பானுமதிக்கு, அவரது தந்தை முறையான கர்நாடக சங்கீத பயிற்சியை கற்றுக் கொடுத்தார்.
* 1939ம் ஆண்டு சி புல்லையா இயக்கத்தில் வெளிவந்த “வரவிக்ரயம்” என்ற தெலுங்கு திரைப்படம்தான் பானுமதி கலையுலகில் கால் பதித்த முதல் திரைப்படம்.
* முதல் திரைப்படத்திலேயே தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடி அனைவரின் கவனங்களை ஈர்த்து புகழடைந்தார் நடிகை பி பானுமதி.
* 1943ம் ஆண்டு “கிருஷ்ண பிரேமா” என்ற திரைப்படத்தில் நடித்தபோது படத்தின் உதவி இயக்குநரான பலுவை ராமகிருஷ்ணாவை காதலித்து மணம் முடித்தார்.
* திருமணத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை பி பானுமதியை, மீண்டும் திரையுலகிற்கு “ஸ்வர்க சீமா” என்ற திரைப்படத்தின் மூலம் கொண்டு வந்தது தயாரிப்பாளரும் இயக்குநருமான பி என் ரெட்டி.
* “ஸ்வர்க சீமா” திரைப்படத்தின் வெற்றி அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டு சென்றதோடு, தொடர்ந்து நடிப்புலகில் பயணிக்கும்படியும் செய்தது.
* அன்றைய தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான பி யூ சின்னப்பா, எம் கே தியாகராஜபாகவதர், டி ஆர் மகாலிங்கம் ஆகியோருடனும் இணைந்து நடித்து வந்தார் பி பானுமதி.
* 1947ம் ஆண்டு வெளிவந்த “ரத்னமாலா” என்ற திரைப்படத்தினை முதன் முதலாக பி பானுமதியும் அவரது கணவரும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.
* 1952ம் ஆண்டு தனது மகன் பரணியின் பெயரில் “பரணி ஸ்டூடியோ” என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார் நடிகை பி பானுமதி.
* 1953ஆம் ஆண்டு “சண்டிராணி” என்ற திரைப்படத்தை முதன் முதலாக திரைக்கதை எழுதி, தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்ததோடு, படத்தை இயக்கியும் வெற்றி கண்டார் பி பானுமதி.
* டி பி ராஜலக்ஷ்மிக்குப் பின் துணிச்சல் மிக்க பெண் திரைப்பட இயக்குநராக தமிழ் திரையுலகில் பார்க்கப்பட்டவர்தான் நடிகை பி பானுமதி.
* தமிழ் திரையுலகின் மூவேந்தர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார் நடிகை பி பானுமதி.
* எம் ஜி ஆருக்கு ஜோடியாக பி பானுமதி இணைந்து நடித்து முதல் திரைப்படம் “மலைக்கள்ளன்”. 1952ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
* எம் ஜி ஆர், பி பானுமதி என்ற இந்த வெற்றிக் கூட்டணி, ஒரே ஆண்டில் “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “மதுரைவீரன்”, “தாய்க்குப் பின் தாரம்” என மூன்று மாபெரும் வெற்றிப்படங்களை தந்து தமிழ் திரையுலகை திகைக்க வைத்தது.
* சிறந்த பின்னணிப் பாடகியான பி பானுமதிக்கு, வேறு எவரும் பின்னணி பாடியதே இல்லை.
* “ரத்னமாலா”, “லைலா மஜ்னு”, “பிரேமா”, “சண்டிராணி”, “சக்ரபாணி”, “விப்ரநாராயணா”, “பட்டாசாரி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களாகும்.
* “சக்ரபாணி”, “இப்படியும் ஒரு பெண்” ஆகிய திரைப்படங்களுக்கு இவரே இசையமைத்து ஒரு இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் பி பானுமதி.
* 1992ம் ஆண்டு இயக்குநர் ஆர் கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்த “செம்பருத்தி” திரைப்படமே, இவர் தமிழில் நடித்து வெளிவந்த கடைசி திரைப்படம்.
* எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது, தமிழ்நாடு இசைக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பினையும் ஏற்று திறம்பட செயல்பட்டு வந்தவர் தான் நடிகை பி பானுமதி.
* தனது இந்த நீண்ட நெடிய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 100க்கும் அதிகமான படங்களில் நடித்த பானுமதி, 2005ம் ஆண்டு டிச., 24ல் தனது 80வது வயதில் மறைந்தார்.
* “பத்மஸ்ரீ”, “பத்மபூஷண்” உட்பட திரையுலகில் இவரது சேவையை பாராட்டும் வண்ணம் பல தேசிய விருதுகளும், மாநில விருதுகளும் இவரது பன்முகத்தன்மை கொண்ட கலைப்பயணத்தை மேலும் அலங்கரித்தன.
* நடிகை, பின்னணிப் பாடகி, தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், இயக்குநர், ஓவியர் என ஒரு பெண் ஆளுமையாக கலையுலகில் புரட்சி செய்த இந்த சகலகலாவல்லியை, அவரது நினைவு நாளான இன்று நாம் நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்.