விமர்சனம்
கல்கி சினி விமர்சனம்
விளைநிலங்களுக்கு ஏற்பட்கூடிய தீமையைப் படம் பிடிக்கும் சினிமா என்றாலும், அதைச் சொல்வதற்கு எடுத்துக் கொண்ட முறைகள் அச்சு அசலாக வணிகப்பட மசாலாக்களாகவே அமைந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால் விளைநிலங்களுக்கு ஆகும் கேடுகள், ஈரல்குலை நடுங்கும் அளவுக்கு கிராஃபிக்ஸில் சொல்லப்பட்டிருக்கின்றன.
சதாசர்வ காலமும் குடித்துக் கூத்தடிக்கும் கதாநாயகனுக்கு விவசாய நிலங்களின்மேல் மட்டும் அதீத அக்கறை இருப்பதாக காட்டப்படுவது நெருடலாக இருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்தின்போது விரசமான வசனத்தையும் அருவருப்பான காட்சியமைப்பையும் தவிர்த்திருக்கலாம்.
அரசியல் கட்டுரைகள் பலவும் எழுதியவராதலால் இயக்குநரின் வசனங்களில் அரசியல் பார்வை நன்கு பளிச்சிடுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களில் இஷ்டத்துக்கு அள்ளிவிடும் பிரபலங்களுக்கு செம குத்துவிடும் காட்சிகள் புன்னகையை வரவழைக்கின்றன. கிராமத்தின் மரம் மட்டைகளை மட்டுமல்ல; புழு, பூச்சிகளையும் கலைநேர்த்தியோடு கேமிரா படமாக்கியிருக்கிறது. உடல்மொழிகள் அற்றதாகவும் வசனங்களின் பலத்தால் சூரியின் பாத்திரம் பல இடங்களில் சிரிப்பலையை அரங்கில் ஏற்படுத்துகிறது.
காவல் நிலையத்தில் இருக்கும் வாகனங்களில் ஓட்டடை படிந்துகிடப்பது போன்ற காட்சிகளைப் போகிற போக்கில் அனாயாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். சிற்சில குறைகள் இருந்தாலும் படத்தின் மையக் கரு உன்னதுமானது. அதனால் தாராளமாகப் பார்க்கலாம்.
கத்துக்குட்டி - செல்லக்குட்டி















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!