கதைச் சுருக்கம்
----------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
பின்தங்கிய மக்களுக்கு கல்வி மட்டுமல்ல, அரசியல் அறிவும் தேவை என்பதையும், வடசென்னை வாழ் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி தேவை என்பதையும் சமூக அக்கறையோடு சொல்லும் படம் மெட்ராஸ்.
அட்டக்கத்திக்குப் பிறகு இயக்குநர் ரஞ்சித்துக்கு இன்னொரு ஹிட். கார்த்தி படம் முழுக்க வட சென்னை இளைஞராகவே வாழ்ந்திரக்கிறார். நீண்ட நாளைக்கு பிறகு அவருக்கு மீண்டும் பேர் சொல்லும் படம் மெட்ராஸ்.
ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் கார்த்தியை சமூகசூழல், அரசியல் எப்படி அவன் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது என்பதே கதை. ஹவுசிங் யூனிட்டில் வாழும் காளிக்குத் தன்னை யாராவது காதலிக்க வேண்டும். ஜாலியாக இளமையைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா பார்க்கும் பெண்களையெல்லாம் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி அம்மாவே தட்டிக் கழிப்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது என்று நண்பர்களோடு கலாய்க்கும் இயல்பான வேடத்தில் கார்த்தி.
தன் நண்பன் அன்புக்காக அடிக்கடி சண்டையில் இறங்கும் கார்த்தியின் முன்கோபத்தால் நண்பனையே இழக்க வைக்கிறது. ஒரு கொலைக் கும்பல் அன்புவை சதித்திட்டம் தீட்டி போட்டுத் தள்ள சிக்கலில் மாட்டுகிறார் கார்த்தி. அதிலிருந்து மீள்வதையும், கலைஅரசியாக வரும் காத்ரினாவைக் காதலித்து கைபிடிப்பதையும் திரைக்கதை நகர்வில் சூப்பராக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் முக்கியமான ஹீரோ என்றால் ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் அந்த சுவர்தான். அரசியல்வாதிகள் தங்கள் கௌரவத்துக்காக சுவர் பயன்படுத்தி அதனால் தலைமுறை தலைமுறையாக வரும் பகையைக் காட்டி புதிய கோணத்தில் எழுதியுள்ளார் இயக்குநர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி ரசிக்க வைக்கிறது. பாடல்கள் கேட்கலாம்.
மெட்ராஸ் - நல்ல மெட்ராஸ்
-----------------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
வடசென்னைதான் கதைக்களம். அங்குள்ள ஒரு சுவர்தான் ஹீரோ. அந்த சுவருக்காக நடக்கும் கொலைகளும் அடிதடிகளும் தான் கதை.
அட்டகத்தியில் காதலை ஜாலியாகச் சொல்லி எளிதாக வெற்றிகண்ட ரஞ்சித், மெட்ராஸில் ஒரு சீரியஸாக விஷயத்தை சீரியஸாகவே சொல்லி ஜெயித்திருக்கிறார். கூடவே, தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்தியை கைகொடுத்து தூக்கியும் விட்டிருக்கிறார்.
தங்கள் ஏரியா சுவரை, பக்கத்து ஏரியா அரசியல்வாதி கண்ணன் ஆக்ரமித்து, அவரது அப்பாவின் போஸ்டரை ஒட்டுகிறார். அதை எதிர்க்கும் கார்த்தியின் நண்பன் அன்புவை, அவர் கண் முன்னாலேயே படுகொலை செய்துவிடுகிறார்கள். நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்குவதும் சுவரை மீட்பதும் என்று வடசென்னை வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.
வடசென்னை வாசிகளின் பாடி லாங்வேஜுடன் மெட்ராஸ் பாஷையையும் இயல்பாகப் பேசி அசத்துகிறார் காளியாக வரும் கார்த்தி. நண்பன் கொலையைக் கண்டு பொங்குவது, காதலிக்க அவர் படும் அவஸ்தை, நண்பனுக்காக எதிரிகளுடன் சண்டை போடுவது என்று எதிலும் குறை வைக்காத நடிப்பு. பருத்தி வீரனுக்குப் பிறகு எப்படியும் ஜெயித்தே ஆவது எனற வெறி கார்த்தியின் நடிப்பில் தெரிகிறது.
ஹீரோயின் கேத்ரின் தெரஸா வடசென்னை வாசியை மிஞ்சிய அழகு. கார்த்தியை காதலிப்பது, பழிவாங்கத் துடிக்கும் கார்த்தியின் மனதை மாற்ற முயற்சிப்பது என்று நன்றாகவே நடித்திருக்கிறார். ஓன்னதா பிடிச்சிருக்கு. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கோப்படுவதில் கூட அழகு!
இவர்களைத் தவிர்த்து கார்த்திக்கின் நண்பனாக அன்பு கதாபாத்திரத்தில் வருளம் கலையரசன் கார்த்திக்கு ஈடுகொடுத்த நடிப்பு.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமை. பாடல்கள் கேட்க மனதிற்கு இதம், கானா பாலாவின் பாடல்கள் சோகத்திலும் மனதிற்கு ஆறுதல்.
மூன்று மணி நேரப் படம் என்றாலும் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டது எடிட்டிங் தான். படத்தின் பெரிய பலம் சண்டைக் காட்சிகள் ஃபுட்பால் விளையாட்டையும், கார்த்தி போடும் சண்டைகளையும் மாற்றி மாற்றி காட்டி மிரட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.
வடசென்னையை அணுஅணுவாக ஆய்வு செய்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான பழிவாங்கும் வன்முறைக் காட்சிகள்தான் படம் முழுக்க வருகிறது என்றாலும், அதிகார வர்க்கத்தினரின் சுயநலத்திற்காக, அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படுவதையும் அரசியல் சூழ்ச்சியையும் துணிவோடு பேசியிருப்பதால் குறைகள் கண்ணில் படவில்லை. இதற்கு ஒரு தீர்வாக படிக்கலாமா? என்று சிறுவர்களைப் பார்த்து கேட்பதில் இருக்கிறது இயக்குநரின் டச்!
மெட்ராஸ் - காளியாட்டம்.
குமுதம் ரேட்டிங் - நன்று

























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!