விமர்சனம்
கல்கி விமர்சனம்
இனிமே இப்படித்தான்!
பொதுவாக சந்தானத்தின் காமெடி என்றாலே எதிராளியை மட்டம் தட்டுவது போலத்தான் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்திலும் அவை உண்டு என்றாலும் அதற்கும் மேலே வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை சுனாமியே இருக்கிறது.
சந்தானம் சீனு என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார், சீனுக்கு சீன், சீனுவின் அதிரடி காமெடி எவர் ரெடி சரவெடி!
பாடல் காட்சிகளில்கூட சிரிப்பை சாதுர்யமாகப் புகுத்தியிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். சந்தானம் நடனத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். நடன இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டிருப்பது தெரிகிறது! சண்டைதான் இன்னமும் சந்தானத்துக்கு செட் ஆகவில்லை!
முருங்கைக் கீரையைப் பறிக்க சுவர் எட்டிக் குதித்தவரைத் துப்பாக்கியால் சுடும் மிலிட்டரி கேரக்டர் உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவூட்டுகிறது. தம்பி ராமையாவின் நடிப்பு சந்தானத்துக்கு ஈடு கொடுக்கும்படி இருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை. வி.டி.வி. கணேஷைப் பார்த்தாலே ரசிகர்கள் குதூகலம் அடைந்து விடுகிறார்கள்.
ஒருநிமிடம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினாலும் அதிரடி சிரிப்புகளில் எதையாவது மிஸ் பண்ண வேண்டிய இருக்கும். சாதாரண காட்சிகள், சீரியஸ் காட்சிகள் என்ற பேதம் இல்லாமல் சிரிப்பு, சிரிப்பு, சிரிப்புதான்!
சந்தோஷ் தயாநிதியின் இசை நன்கு உள்ளது. கதாநாயகிகள் ஆஷ்னா சவேரி மற்றும் அகிலா கிஷோர் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
அசரீரி மூலம் கதை சொல்வது, டாஸ்மாக் காட்சிகள் வைப்பது என்ற பார்த்துத் தேய்ந்த காட்சிகள் இந்தப் படத்திலும் இருப்பது கொடுமை. சந்தோஷம் என்றாலும் மது, வருத்தம் என்றாலும் மது என்று இளைஞர்களுக்குத் தவறான பாதை காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டு கதாநாயகிகளும் சந்திக்கப் போகிறார்கள் என்பதை முன்னதாகவே யூகிக்க முடிகிறது என்றாலும் அதைச் சுவாரசியம் கெடாமல் சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வளவு நகைச்சுவை மிளிரும் படத்தை திருஷ்டிப் பரிகாரமாக வரும் ஒரு சில இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். வழுக்கை விழுந்தவர்கள், உடல் பருமன் உள்ளவர்களைக் கிண்டல் செய்வது, மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வதற்குச் சமம் என்பதை எப்போதுதான் உணர்வார்களோ?
மற்றபடி சமீப காலத்தில் இதைப் போன்ற முழு நீள நகைச்சுவைப் படம் வந்ததே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். சபாஷ் இயக்குநர்(கள்) முருகானந்தம் மற்றும் தயாரிப்பாளர் சந்தானம்!
இனிமே இப்படித்தான்: ஆல்வேஸ் சிரிப்புத்தான்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!