விமர்சனம்
--------------------------------------------------------------
கல்கி சினிவிமர்சனம்
சயின்ஸ் ஃபிக்ஷன் என்று தமிழில் அதிகம் தொடப்படாத சப்ஜக்ட் கையாளப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் பாராட்டைத் தெரிவித்துவிடாலாம். மொத்த படத்தின் நீளத்தில் அறிவியல் புனைவுப் பகுதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அளவு மிகவும் குறைவு. கூடவே சோகையாக இரண்டு கிராமத்துக் காதல்களும் வருகின்றன. சயின்ஸ் ஃபிக்ஷன் பற்றிக் கடைசியில் இன்னொரு விஷயமும் சொல்கிறேன்.
சரி உரையாடல்? விஞ்ஞானி கிட்டி, விண் கல்பற்றிச் செந்தமிழில் கொஞ்ச நேரம் பேசுகிறார். சடாரென்று அதே காட்சியில் பேச்சுத் தமிழுக்கு மாறிப் புகுந்து விளையாடுகிறார். அவர்தான் அப்படி என்றால் ஊர் மக்கள் பேசுவதிலும் கொங்கு மண்வாசம் மிஸ்ஸிங். கொங்குத் தமிழ் தெரிந்த யாரையாவது உரையாடல் எழுதச் சொல்லி இருக்கலாம். கூடவே டப்பிங் பேசுபவர்களும் கோயமுத்தூர்க்காரர்களாக இருந்திருக்கலாம்.
ஊரிலேயே பெருந்தனக் காரருரம் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவருமான ஒருவரது வீட்டில் காரோட்ட வந்த புது இளந்தாரி, சலூனுக்குள் நுழைவதைப் போல சர்வசாதாரணமாக நுழைந்து, உறவுக்காரப் பெண்ணின் அறையில், கட்டிலில் பட்டப்பகலில் உட்கார்ந்து அந்தப் பெண்ணோடுபேசுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் அபத்தம் சிரிப்பை வரவழைக்கிறது.
நடிகர், நடிகைகள்? அச்சு அசலான கிராமத்து மக்களே பெரும்பாலும் நடித்திருக்கின்றனர். இல்லை... இல்லை... வாழ்ந்து விட்டு போயிருக்கின்றனர். மிக மிக யதார்த்தமான கதை மாந்தர் தேர்வு. ஒரு சபாஷ் போட்டே தீர வேண்டும். ஆனால் கதாநாயகன் யார் என்பதில்தான் குழப்பம். டிரைவராக ஆக்டிங் செய்பவரா? ல்லது ஆக்டிங் டிரைவரா? தாடி வைத்திருப்பதில் இருந்து ஆக்டிங் டிரைவர்தான் கதாநாயகன் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. அதேபோல கதாநாயகி யார் என்பதிலும் குழப்பம் தான். உள்ளூர் பெண்ணா? அல்லது உறவுக்காரப் பெண்ணா? தன் காதலனை வாடா போடா என்று பேசுவதிலிருந்து உள்ளூர்ப் பெண்ணே கதாநாயகி என்று தெளிவடையலாம்.
இயக்குநர் மாத்தி யோசித்திருக்கிறாரா? நிச்சயமாக, பெரும்பாலும் தற்போதைய அனைத்துத் தமிழ் சினிமாக்களிலும், பயத்தில் சிறுநீர் கழிப்பதைப் போல உத்தரவாதமாகக் காட்சி இருக்கும். ஆனால் அ.கி.வில் கோபத்தில் - அதுவும் ஓடுகிற ஒரு ஜீப்பிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் இன்னொரு ஜீப் கண்ணாடி மீது - உச்சா போவதுபோல ஒரு சீன்! சான்சே இல்லை. இதே போல இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர், உட்கார்ந்த வாக்கில் விண் கல் பற்றிய கருத்துக்களைப் பேசுவதாவும் காட்சி உண்டு!
மரபுகளைப் போற்றுவது மாதிரி ஏதாவது...? என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்! திருவிழா, சம்பந்தம் இல்லாத குத்தாட்டம், அடிக்கடி மது அருந்தும் காட்சிகள், கூட்டமாகப் புகைபிடிப்பது போன்ற தமிழ் சினிமாவின் மரபுகள் இதிலும் உண்டு. மேலும் நாடகக் கலை நசித்து வருவதை உணர்ந்த இயக்குநர், பல காட்சிகளை நாடகம் போலவே படமாக்கி இருக்கிறார். ஆட்டுக்குட்டி, சிறுமி காட்சி நல்ல உதாரணம்.
சரி சரி! சயின்ஸ் ஃபிக்ஷன் பற்றிக் கடைசியில் என்னமோ சொல்வதாகச் சொன்னீர்களே?
எண்டமூரி வீரேந்திரநாத் என்பவர் யுகாந்தம் என்று தெலுங்கில் நாவல் ஒன்று எழுதி இருக்கிறார். தமிழில் பிரளயம் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். வானிலிருந்து ஒரு விண் கல் பூமியை நோக்கி வருவது தெரிந்த பிறகு, குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் மனத்தில் நிகழும் மாற்றங்களை விவரித்திருப்பார்.
அப்புச்சி கிராமம் சயின்ஸ்ஃபிக்ஷனைப் பற்றி கேட்டால் யுகாந்தம் நாவலைப் பற்றிச் சொல்கிறீர்களே?
அப்புச்சி கிராமம் - யதார்த்தம்
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!