
ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி செய்த 2025
இந்த வருடத்திலாவது தமிழ் சினிமா 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்படத் தயாரிப்பு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்துதான் ஆரம்பமானது. ஆனால் இன்று சில சாதனைகளில் தமிழ் சினிமாவை விடவும் மற்ற தென்னிந்திய மொழிகளில் முந்திச் செல்கிறது.
அதிக வசூல்
இந்திய அளவில் இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படங்களில் தமிழ்ப் படமான ரஜினியின் "கூலி" 600 கோடியை கடந்து 5வது இடத்தில் உள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி படமான ‛துரந்தர்" ஆயிரம் கோடியை கடந்து முதலிடத்திலும், கன்னடப் படமான "காந்தாரா சாப்டர் 1", 900 கோடி வசூலைக் கடந்து இரண்டாமிடத்திலும் உள்ளன. ஹிந்திப் படங்களான "சாவா" 800 கோடியுடன் 3ம் இடத்திலும், "சாயாரா" 630 கோடி வசூலை நெருங்கி 4ம் இடத்திலும் உள்ளன.
லாபம் தந்த படங்கள்
இந்தாண்டு விஜய் தவிர்த்து அநேக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகின. ரஜினிக்கு ‛கூலி", கமலுக்கு ‛தக் லைப்", அஜித்திற்கு ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி", விக்ரமிற்கு ‛வீர தீர சூரன் 2", சூர்யாவிற்கு ‛ரெட்ரோ", தனுஷிற்கு ‛குபேரா, இட்லி கடை", விஜய் சேதுபதிக்கு ‛ஏஸ், தலைவன் தலைவி", சிவகார்த்திகேயனுக்கு ‛மதராஸி", விஷாலுக்கு ‛மதகஜராஜா", பிரதீப் ரங்கநாதனுக்கு "டிராகன், டியூட்" ஆகிய படங்கள் வெளியாகின.
இவற்றில் "கூலி, குட் பேட் அக்லி, தலைவன் தலைவி, மத கஜ ராஜா, டிராகன், டியூட், டூரிஸ்ட் பேமிலி, பைசன், மாமன், குடும்பஸ்தன், ஆண்பாவம் பொல்லாதது" ஆகிய படங்கள் லாபம் தந்தன. கூலி, குட் பேட் அக்லி தவிர்த்து மற்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அதிக லாபம் தந்தவை.
"தக் லைப், விடாமுயற்சி, ரெட்ரோ, குபேரா, இட்லி கடை, ஏஸ், மதராஸி" ஆகிய படங்களில் சில படங்கள் 100 கோடி, 50 கோடி வசூலை தந்தாலும் நஷ்டத்தையே தழுவின. "குபேரா" படம் தமிழில் நஷ்டமும், தெலுங்கில் லாபமும் தந்தது.
ஒரே ஆண்டில் "டிராகன், டியூட்" ஆகிய இரண்டு 100 கோடி படங்களை தந்த பிரதீப் ரங்கநாதன், இந்தாண்டில் அனைத்து தரப்பினருக்கும் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக "டிராகன்" படத்தை தந்தார்.
டப்பிங் படமாக வந்த "காந்தாரா சாப்டர் 1", அனிமேஷன் படமாக வந்த "மகாஅவதார் நரசிம்மா" ஆகிய படங்கள் தமிழகத்தில் வசூலைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
2000 கோடி நஷ்டம்
ஒரு கணக்கிற்கு முன்னணி நடிகர்களின் படங்களை எடுத்துக் கொள்வோம். அது குறித்து பல்வேறு மட்டங்களில் விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அப்படங்களுக்கான பட்ஜெட்டாக தோராயமாக 1600 கோடி செலவிடப்பட்டுள்ளது. அவற்றின் வசூலும் 1600 கோடிதான். இந்த 1600 கோடி என்பது மொத்த தொகை, அதில் பங்குத் தொகை, விளம்பர செலவு, இதர செலவுகள், ஜிஎஸ்டி ஆகியவற்றைக் கழிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு 60 முதல் 70 சதவீதம் தான் போய் சேரும். கூட்டி கழித்து பார்த்தால் 600 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு படத்திற்குமான வியாபாரம் என்பது சதவீதம், விநியோக அடிப்படையில் வெவ்வேறாக அமைந்திருக்கும்.
மீடியம் படங்கள் என இந்த ஆண்டில் வெளியான படங்களில் "குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது" ஆகிய படங்களின் பட்ஜெட் சுமாராக 175 கோடி வரை இருக்கும். இந்த படங்கள் வசூலித்த தொகை 600 கோடியைக் கடந்துள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்களைத்தான் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்கள் என்று சொல்ல வேண்டும்.
இந்த ஆண்டில் வெளிவந்த 280 படங்களில் 250 படங்கள் நஷ்டத்தையே தந்துள்ளன. அவற்றில் ஓரிரு படங்கள் இதர உரிமைகள் மூலம் தயாரிப்பாளருக்குக் கொஞ்சம் வருவாயைக் கொடுத்திருக்கலாம். மற்றபடி அந்தப் படங்கள் மூலம் சுமார் 1400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்.
தற்போது கிடைத்துள்ள முதல் தகவல்கள் அடிப்படையில் இந்தாண்டில் தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்தமாக 2000 கோடிக்கு மிகாமல் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தியேட்டர்கள் மூடும் அபாயம்
சென்னை போன்ற பெரு மாநரங்களில் முக்கிய பகுதிகளில் உள்ள தனி தியேட்டர்கள் வார நாட்களில் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சில காட்சிகளுக்கு மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வரும் சூழல் உள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் உள்ள பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் அதிகம்.
தீர்வு தான் என்ன
முன்னணி நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும், ஓடிடியில் படங்களை வெளியிட 100 நாள் இடைவெளி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த சில நாட்களாக திரையுலகத்தில் எழுந்துள்ளது. ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றன, மற்ற சிறிய நடிகர்களையும், படங்களையும், கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
புதிய படங்களை வெளியிடுவதில் ஒரு ஒழுங்குமுறை தமிழ் சினிமாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அவரவர் வசதிக்கேற்ப படங்களை வெளியிடுகிறார்கள். அறிவிக்கப்பட்டு தள்ளிப் போகும் படங்கள் என சில வாரங்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இப்படியான சமயங்களில் சில ரீரிலீஸ் படங்கள் சில தியேட்டர்களைக் காப்பாற்றி வருகிறது.
தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர்கள் சங்கம், நடிகர் சங்கம் என நிறைய சங்கங்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. ஆனால், புதுப் படங்களின் வெளியீட்டில் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து இதுவரை பேசியதாகத் தெரியவில்லை. புத்தாண்டிலாவது அதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினால் மட்டுமே தமிழ் சினிமாவின் வளர்ச்சிப் பாதை கொஞ்சமாவது சீராகும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!