
கே.விஸ்வநாத் ‛அண்ட் இன்னும்... சில தெலுங்கு டைரக்டர்ஸ்...!
லிங்குசாமி, விக்னேஷ் சிவன், "சிறுத்தை" சிவா, கார்த்திக் சுப்பராஜ் என்று பல முன்னணி தமிழ் இயக்குனர்கள் சூர்யாவின் மார்க்கெட்டை பின்னுக்குத் தள்ளியிருந்த நிலையில் வெங்கி அவரை மீண்டும் டாப் டென்னில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். இன்று மிகக்குறைவான பட்ஜெட்டில் படமெடுப்பவர்களே தங்கள் படங்களை பான் இந்தியா படமாகக் காட்ட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் மொழியில் வெற்றிக் கொடி கட்டிய ‛லக்கி" பாஸ்கர்கள் பக்கத்து மொழிக்கும் படையெடுக்க நினைப்பது இயல்பு தானே ? அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவை நோக்கி தெலுங்கு இயக்குனர்களின் படையெடுப்பு உள்ளூர் இயக்குனர்களுக்கு உதறலெடுக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
1931ல் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்" ஐ இயக்கியவரே ஆந்திராவைச் சேர்ந்த எச்.எம்.ரெட்டிகாரு என்பதை வைத்தே தமிழுக்கும் தெலுங்குக்குமான, நீண்ட நெடுங்கால சினிமா பந்த பாசத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கே விஸ்வநாத்
எச்.எம்.ரெட்டியை அடுத்து பல நூற்றுக்கும் மேற்பட்ட தெலுங்கு இயக்குனர்கள் நேரடியாக, மொழிமாற்று மூலமாக தமிழில் தடம் பதித்திருக்கிறார்கள் என்றாலும் அப்பட்டியலின் சிகரத்தில் எப்போதும் இருப்பவர், இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் "சலங்கை ஒலி"க்குச் சொந்தக்காரரான கே. விஸ்வநாத் தான்.
இவரை அடுத்து அவரது உதவி இயக்குநரான வம்சி, இளையராஜா இசையில் கார்த்திக், பானுபிரியாவை வைத்து இயக்கிய "பாடும் பறவைகள்" [1985] ஒரு தெலுங்கு இயக்குனரின் தமிழ்ப்படம் என்கிற வகையில், பெரும் கவனம் பெறுகிறது.
ராம் கோபால் வர்மா
அதைத் தொடர்ந்து "89ல் நாகார்ஜுனா, அமலா காம்போவின் "உதயம்" என்றொரு படம் டப் ஆகி ரிலீஸாகிறது. முதல் இரு தினங்களில் காலியாக இருந்த தியேட்டர்கள் படம் பார்த்த ஒரு சிலரின் மவுத் டாக்கால் விஸ்வரூப வெற்றி பெற்றது. இந்த தனது முதல் படம் மூலம் தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பிரபலமானார் அதன் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அடுத்து பாலிவுட்டிலும் மிரட்டிய அவர் மெல்ல தேய்ந்து தற்போது ‛ரம்" கோபால் வர்மா ஆகியிருக்கும் கதை அவராலேயே எடுக்கப்படப் வேண்டிய ஒரு பயோபிக்.
பான் இந்தியா இயக்குனர்
நிகழ்காலத்துக்கு வருவோம். பான் இந்தியா இயக்குனராகிவிட்ட எஸ்.எஸ்.ராஜமவுலியைத் தவிர்த்து இப்போது மூன்று தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
டாப்பில் வெங்கி
தனுஷை வைத்து "குபேரா" படத்தை இயக்கிய சேகர் கம்முலா அடுத்த தமிழ்ப் படத்தை சூர்யா, தனுஷ் இருவருக்கும் கதை சொல்லிக் காத்திருக்கிறார்.
விஜய்யை வைத்து தமிழ், தெலுங்கில் "வாரிசு" ஹிட் படம் கொடுத்து அடுத்த தமிழ்ப் படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் வம்சி பைடிபள்ளி. 2016ல் கார்த்தி, நாகார்ஜுனா காம்போவில் வெளியான "தோழா" படமும் இவர் இயக்கமே.
இந்த லிஸ்டில் இப்போது டாப்பில் இருப்பவர் தனுஷை வைத்து "வாத்தி", தற்போது சூர்யாவை வைத்து" விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்திருக்கும் வெங்கி அட்லூரி. இதற்கு முன்னர் இவரது இயக்கத்தில் வெளியான "லக்கி பாஸ்கரும் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மும்மொழி ஹிட்கள்.
இடைச்செருகலாக, துக்கம் தொண்டையை அடைக்கும் செய்தி ஒன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. தெலுங்கு இயக்குனர்கள் தமிழில் ‛சிக்ஸர்" அடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ஏ.ஆர்.முருகதாஸ், வெங்கட் பிரபு, லிங்குசாமி, ஷங்கர் ஆகியோர் ‛கிளீன் போல்ட்" ஆகி திரும்பியிருக்கிறார்கள். ஆக, தமிழ் இயக்குனர்கள் என்றாலே ஆந்திர ஹீரோக்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடும் நிலையில் தெலுங்கு இயக்குனர்களின் கொடி கோடம்பாக்கத்திலும் பற்றிப் படர்கிறது என்பதே நிஜ நிலவரம்.
‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்"-ன் வெற்றி குறித்து துவங்கிய இக்கதையை கே.விஸ்வநாத்துடன் தான் முடிக்க வேண்டியிருக்கிறது. அவர் தெலுங்கில் இயக்கி தமிழிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய "சங்கராபரணம்" , "சலங்கை ஒலி" , "சிப்பிக்குள் முத்து"களுக்கு இணையான படங்களை, அந்த சாதனையை எக்காலத்திலும் எவராலும் நெருங்கிச் செல்லக்கூட முடியாது.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!