
ஜுலை மாதத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுமா ?
முதல் அலையின் பாதிப்புக்கும் இரண்டாவது அலையின் பாதிப்புக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முதல் அலையின் போது 8 மாதங்களுக்குப் பிறகுதான் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த முறை ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அது இன்னும் அதிகமாகலாம்.
இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் ஜுலை மாதம் முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில முக்கிய படங்களை ஜுலை கடைசியில் வெளியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அது போல தமிழ்நாட்டிலும் அனுமதி கிடைக்குமா என்று இங்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி கொடுப்பார்கள். அதை ஜுலை மாதத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.
"டாஸ்மாக்" கடைகளைத் திறந்த பின்பு தங்களது கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், திரையுலகத்தில் இன்னும் யாருமே தியேட்டர்களைத் திறக்க அனுமதியுங்கள் என்று எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. புதிய அரசாங்கம் என்பதால் பொறுப்பிலிருப்பவர்களை அணுக திரையுலகத்தினர் தயங்கி வருவதாகத் தெரிகிறது என்றும் ஒரு பேச்சு உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!