
விவேக் பற்றி பேசினால் தொண்டை அடைக்கிறது - வடிவேலு கண்ணீர்
அதில் அவர் கூறுகையில், ‛‛என் நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்துட்டான் என்று இன்றைக்கு காலையில் செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அவனும், நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளோம். விவேக்கை பற்றி பேசும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன், உதவும் எண்ணம் கொண்டவன். ஐயா அப்துல் கலாம் உடன் நெருக்கமாக இருப்பான். விழிப்புணர்வு, மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். இரண்டு பேரும் உரிமையோடு என்னடா வடிவேலு, விவேக் என்று பேசிக் கொள்வோம். அவனை மாதிரி ஒளிமறைவு இல்லாமல் பேசக்கூடிய ஆளே கிடையாது.
கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியல, இந்த நேரத்தில் என்ன பேசுவது என்றே தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. நான் மதுரையில் என் அம்மா உடன் இருக்கிறேன். என் நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விவேக் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். அவன் எங்கும் செல்லவில்லை, உங்களுடன் தான் இருக்கிறான், மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்".
இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!