
பிரமோஷனே இல்லை : தியேட்டர்காரர்கள் வருத்தம்
"மாஸ்டர்" படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்களில் "களத்தில் சந்திப்போம்" படத்திற்கு மட்டும் ஓரளவிற்கு மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான "சக்ரா" படத்திற்கு சில ஊர்களில் மட்டும் கூட்டம் வந்துள்ளது.
மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராமல் போவதற்கு தயாரிப்பாளர்கள் எந்தவிதமான பிரமோஷன் செய்யாததுதான் ஒரு முக்கிய காரணம் சில முக்கிய தியேட்டர்காரர்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். வாராவாரம் என்னென்ன படங்கள் வருகிறது என்பது கூட மக்களுக்குத் தெரியவில்லை.
படம் சம்பந்தப்பட்ட நடிகர்கள், நடிகைகள் பேட்டிகளைக் கூடக் கொடுப்பதில்லை. நாளிதழ்கள், டிவிக்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் பிரமோஷனே செய்வதில்லை என குறைபட்டுக் கொள்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
கடந்த வாரம் வெளியான "சக்ரா" படத்திற்கு எந்தவிதமான பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடக்கவில்லை. இரண்டு முறை நிகழ்ச்சி வைப்பதாக சொல்லி ரத்து செய்துவிட்டார்கள். பட வெளியீட்டிற்கு முன்பாக அந்தப் படம் பற்றி அதிகமான செய்திகள் வரவேயில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த விஷால் கூட இப்படி செய்யலாமா என அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!