
ஓம்: மீண்டும் பழைய படத் தலைப்பில் தனுஷ்
தமிழ் சினிமாவில் தலைப்பு வைப்பதற்காக ஒவ்வொரு இயக்குனரும் நிறையவே தேட வேண்டியதாகி இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தேடித் தேடிப் பெயர் வைக்கிறார்கள். சிலர் பழைய படங்களின் பெயர்களைத் தங்கள் படத்திற்கு வைத்துவிடுகிறார்கள். கேட்டால், கதைக்குப் பொருத்தமான பெயராக இருந்தது, அதனால் வைத்தோம் என்று சொல்லிவிடுவார்கள்.
"அமரன்" படத்திற்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அவரது 55வது படத்திற்கு நேற்று "ஓம்" என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பில் 1995ம் ஆண்டில் கன்னடத்தில் ஒரு படம் வந்திருக்கிறது.
உபேந்திரா இயக்கத்தில், சிவராஜ்குமார், பிரேமா மற்றும் பலர் நடித்த படம். அந்தக் காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் இது. தமிழிலும் கூட டப்பிங் ஆகி வெளியானது.
மீண்டும் ஏன் பழைய படத்தின் பெயர் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டதற்கு, “கதைக்குப் பொருத்தமான தலைப்பு இது. எனது முந்தைய படமான "அமரன்" படம் கூட பழைய படத்தின் தலைப்புதான். தனுஷ் சார் கூட இதற்கு முன்பு கூட பழைய படங்களின் தலைப்பில் நடித்திருக்கிறார். கதையின் தலைப்பை எழுதி விட்டுத்தான் திரைக்கதை எழுதுவேன். இந்தப் படத்திற்கும் அப்படித்தான் எழுதினேன். தலைப்பிற்கும் கதைக்கும் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது,” என்றார்.
இதற்கு முன்பு, “பொல்லாதவன், படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, தங்கமகன், அசுரன், கர்ணன், மாறன்,” ஆகிய பழைய படங்களின் தலைப்புகளில் தனுஷ் நடித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!