
ராதிகாவை கிழவியாக மாற்றிய வினீஷ்
ராதிகா நடிப்பில் வெளிவந்துள்ள "தாய்கிழவி" படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ராதிகா 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியாக நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டப்படும் அதே நேரத்தில் அவரது மேக்அப்பும் பேசு பொருளாகி உள்ளது.
ராதிகாவை தாய்கிழவியாக மாற்றியவர் ப்ராஸ்தடிக் மேக்அப் கலைஞர் வினீஷ். கேரள மாநிலம் கொட்டாரக்கராவை சேர்ந்த இவர் சென்னை பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதன்பிறகு சிலைகள் செய்து விற்பனை செய்து வந்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்கூல் ஆப் கேரக்டர் கல்லூரியில் சேர்ந்து ப்ராஸ்தடிக் மேக்அப் கலையை கற்றார். "பர்த் மார்க்" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது "தாய்கிழவி" படத்தின் மூலம் புகழ்பெற்றுள்ளார். தாய்கிழவி குறித்து அவர் கூறும்போது, ""இந்த வாய்ப்பு ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. இது சவாலான பணி, பெரிய நடிகை என்பதால் அவருக்கு எந்த இடையூறோ பக்க விளைவுகளோ வந்து விடக்கூடாது என்று பயந்தேன். இதனால் பல மாதங்களாக என் மனைவி உள்ளிட்ட பல பெண்களும் அந்த மேக்அப்பை போட்டு பரிசோதனை செய்த பிறகே ராதிகாவிற்கு அதை செய்தோம். மேக்அப் போடுவதற்கு 5 மணி நேரமும், இதை கலைப்பதற்கு 3 மணி நேரமும் ஆனது"" என்கிறார்.
வினீஷ் தற்போது ராஜமவுலியின் "வாரணாசி", ராகவா லாரன்சின் "காஞ்சனா 4" படங்களில் பணியாற்றி வருகிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!