
குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை
இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை : 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். பட வெளியீடு தவிர்த்து எதற்காகவும் நான் மீடியா முன் வந்தது இல்லை. ஆனால் இப்போது என்னை பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
பொய்யான குற்றச்சாட்டு
கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மவுனமாய் இருந்தேன். என் மாப்பிள்ளை(ஜெயம் ரவி) என்னிடம் நீங்கள் படமும் தயாரிக்க வேண்டும் என்றார். அவரை வைத்து அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று படங்களை தயாரித்தேன். இதற்காக ரூ.100 கோடி கடன் பெற்றேன். அந்த பணத்தில் 25 சதவீதம் அவருக்கு சம்பளமாக வழங்கினேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
ஆனால் நான் வாங்கிய கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார். இதில் உண்மை இல்லை. அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி சொந்த மகனாகவே கருதினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காக பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். கோடிக்கணக்கான ரூபாய்க்கு அவரை பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.
பொய் உங்களை தரம் தாழ்த்துகிறது
இன்றும் என் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்கின்ற பொய்கள், உங்களை ஹீரோ பிம்பத்திலிருந்து தரம் தாழ்த்தி விடுகிறது. நீங்கள் என்றும் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது.
ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!