
பிளாஷ்பேக்: “அன்னை இல்லம்” வழங்கிய அருமை இயக்குநர் பி மாதவன்
டி ஆர் ரகுநாத் இயக்கி, இயக்குநர் ஸ்ரீதரின்; வசனத்தில் வெளிவந்த “யார் பையன்” திரைப்படத்தில் அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த பி மாதவன், பின்னர் இயக்குநர் ப நீலகண்டனிடம் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். “கல்யாணப்பரிசு” திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, முதன் முதலாக படத்தை இயக்க ஆரம்பித்தபோது, இயக்குநர் ஸ்ரீதர் தன்னோடு “யார் பையன்” திரைப்படத்தில் பணிபுரிந்து வந்த பி மாதவனையும், ஒளிப்பதிவாளர் வின்சென்டையும் அழைத்து தனது யூனிட்டில் இணைத்துக் கொண்டார்.
சிறிது காலத்திற்குப் பின் தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசன் தயாரித்த “மணியோசை” திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பி மாதவனுக்கு கிடைக்க, மனதார வாழ்த்தி அனுப்பியும் வைத்தார் இயக்குநர் ஸ்ரீதர். “மணியோசை” திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், இயக்கம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் வணிக ரீதியில் படத்தை இயக்கியிருக்கலாம் என்று அவர் கூற, அதன்படியே படமும் வசூலில் தோல்வியை சந்தித்தது.
அப்போது இயக்குநர் பி மாதவன் தனது இரண்டாவது திரைப்படமான “அன்னை இல்லம்” திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜியை வைத்து இயக்கிக் கொண்டிருக்க, “மணியோசை”யின் தோல்வியைக் கண்டு, “அன்னை இல்லம்” படத்தின் தயாரிப்பாளரான சந்தானம் இயக்குநர் பி மாதவனை படத்திலிருந்து மாற்றிவிட தீர்மானிக்க, “மாதவன் தொழில் தெரிந்தவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து அவரே “அன்னை இல்லம்” திரைப்படத்தை இயக்கட்டும்” என சிவாஜி கூறியதன் பின், இயக்குநர் பி மாதவனின் இரண்டாவது படமாக வெளிவந்தது “அன்னை இல்லம்” திரைப்படம்.
வசூலில் பெரும் வெற்றி பெற்று, சிவாஜியின் நம்பிக்கையை பூர்த்தி செய்ததோடு, இயக்குநர் பி மாதவனுக்கு திரையுலகில் ஒரு நிலையான இடத்தையும் பெற்றுத் தர வழி வகுத்தது “அன்னை இல்லம்” திரைப்படம். தொடர்ந்து “நீலவானம்”, “எங்க ஊர் ராஜா”, “வியட்நாம் வீடு”, “ராமன் எத்தனை ராமனடி”, “தேனும் பாலும்”, “ஞான ஒளி”, “பட்டிக்காடா பட்டணமா”, “ராஜபார்ட் ரங்கதுரை”, “தங்கப்பதக்கம்”, “மனிதனும் தெய்வமாகலாம்”, “மன்னவன் வந்தானடி”, “பாட்டும் பரதமும்”, “சித்ரா பௌர்ணமி”, “ஹிட்லர் உமாநாத்” என நடிகர் திலகம் சிவாஜிகணேசனை இயக்கும் வாய்ப்பினைப் பெற்று, அவரது திரைப்பயணத்தில் பல முத்தான திரைப்படங்களைத் தந்து, அவரது நம்பிக்கைக்குரிய இயக்குநராகவும் வலம் வந்து கலைத்துறையின் உச்சம் தொட்டவர்தான் இயக்குநர் பி மாதவன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!