
தி கோட் - வட இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர் வெளியீட்டில் சிக்கல்
இதனிடையே, வட இந்திய மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் "தி கோட்" படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த சங்கத்தினர் ஒரு படம் தியேட்டர்களில் வெளியானால் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை கட்டுப்பாடாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும்படி அவற்றின் தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு படங்களை விற்கிறார்கள். அதன் மூலம் ஒரு பெரும் தொகை அவர்களுக்குக் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் எந்த ஒரு பெரிய படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடுவதே அதிகம் என்ற நிலைதான் உள்ளது.
"தி கோட்" படத்திற்கான வட இந்திய வெளியீடு குறித்து அதன் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் சங்கத்தினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகச் சொல்கிறார்கள். எனவே, வட இந்தியாவில் சிங்கிள் தியேட்டர்களில் மட்டுமே "தி கோட்" படம் வெளியாகிறது. அங்கு படத்தை வெளியிடும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் 500க்கும் மேற்பட்ட இடங்களில் 1000க்கும் கூடுதலான தியேட்டர்களில் வட இந்தியாவில் இப்படம் வெளியாகிறது என அறிவித்துள்ளது.
செப்டம்பர் 6ம் தேதி வெளியாவதாக இருந்த கங்கனா ரணாவத் நடித்த "எமர்ஜென்சி" படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், "தி கோட்" படத்திற்கு பெரிதாக எந்த போட்டியும் இல்லை. எனவே, வட இந்திய மாநிலங்களில் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் படத்தை வெளியிட்டிருந்தால் அந்த வசூல் சாதனை வசூலாக இருந்திருக்குமே என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!