
பிளாஷ்பேக் : சத்ய சாய்பாபாவுக்கு வீட்டை தானமாக கொடுத்த அஞ்சலி தேவி
மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த அஞ்சலிதேவி மன நிம்மதி வேண்டி புட்டபர்த்தி சென்று சத்ய சாய்பாபாவை தரிசித்தார். அவர் முன் மனமுருகி நின்ற போது “நீங்கள் இழந்த எல்லாவற்றையும், இழந்தது போலவே பெறுவீர்கள். மீண்டும் படம் தயாரியுங்கள்” என்றார் பாபா.
அஞ்சலி தேவிக்கு அதிர்ச்சி. படம் தயாரித்துதானே இப்படி ஒரு நிலைக்கு ஆளானோம், பாபா படம் தயாரிக்க சொல்கிறாரே என்ற கலக்கத்துடன் சென்னை திரும்பிய அஞ்சலி தேவி தன் பெயரில் இருந்த ஒரு வீட்டை அடமானம் வைத்து, இருக்கிற நகைகள் அனைத்தையும் விற்று "சதி சக்குபாய்", "பக்த துக்காரம்" என்ற இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். கடன்களை அடைத்தார், நகைகளை வாங்கினார், அடமானம் வைத்த வீட்டையும் மீட்டார்.
தனக்கு புதுவாழ்வு தந்த சத்ய பாபாவுக்கு ஏதாவவது கைமாறு செய்ய வேண்டும் என்று கருதிய அஞ்சலி தேவி அந்த வீட்டையே பாபாவின் ஆன்மிக அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்து விட்டார். அந்த வீடு இப்போதும் அடையாறில் "சுந்தரம்" என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் நடந்து வருகிறது.
இதற்கு பிறகு சத்ய சாய்பாபாவின் வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி கேட்டார் அஞ்சலி. “நான் சொல்லும்போது எடுங்கள்” என்ற பாபா 20 வருடங்களுக்கு பிறகு அனுமதி கொடுத்தார். "சத்ய சாய்பாபா" என்ற பெயரில் தயாரான அந்த படத்தில் அஞ்சலிதேவி பாபாவின் அம்மாவாக நடித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!