
விஜய்சேதுபதி படத்தில் வன்முறை காட்சிகளை நீக்கிய தணிக்கை குழு
படம் பற்றி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியதாவது : கடந்த 14 வருடங்களாக என் மனதில் இருந்த கதை இது. 14 முறை இந்த கதையை திருத்தி செப்பனிட்டிருக்கிறேன். இந்த படம் ஆரம்பிக்கும்போது இது விஜய்சேதுபதியின் 50வது படமாக தொடங்கவில்லை. அது எதேச்சையாக அமைந்தது. இதனால் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வந்தது.
படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார் என்பதை தொடர்ந்து ரகசியமாக வைத்திருப்போம். படம் வெளிவரும்போது அது தெரியவரும், படத்தில் பாரதிராஜாவும், அனுராக் காஷ்யப்பும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள் என்பதால் அவர்களை இந்த படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். படப்பிடிப்பு காலங்களில் இவர்கள் இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன்.
படத்தில் விஜய்சேதுபதி சலூன் கடை நடத்துகிறவராக நடிக்கிறார். ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் எளிய மனிதர் அவர். ஆனால் அவரையே இந்த சமூகம் கலைத்து போடுகிறது. தான் யார், தான் தொலைத்தது என்ன? என்பதை தேடி அவர் ஓடுகிறார். அதற்கான விடைகளை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் அதிகமாக வன்முறை இருப்பதாக கூறி சில காட்சிகளை நீக்கினார்கள், சில காட்சிகளின் நீளத்தை குறைத்தார்கள். அதனால் கதைக்கு பாதிப்பு இல்லை என்பதால் அப்படியே செய்தோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!