
உன்னோட நடந்தா பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா
"உன்னோட நடந்தா" பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி சுகா அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது,
உன்னோட நடந்தா . . .
வெற்றி மாறன் அழைத்தான்.
"அண்ணே! உங்களை ஒருத்தர் பாக்கணுமாம். உடனே கிளம்பி வாங்க."
"யாருடா?" அசட்டையாகக் கேட்டேன்.
சிரிப்பை அடக்கிக் கொண்டு பெரியவர் பேரைச் சொன்னான். அருகில் அவரது சிரிப்புச் சத்தம் கேட்டது.
"அடேய்" என்றபடி போனை வைத்துவிட்டு ஓடினேன்.
"இப்படி கூப்பிட்டாதான் வருவே இல்ல!?" என்றபடி வரவேற்றார்.
"விடுதலை" படத்திற்காக ஒரு பாடல் எழுத அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.
"எனக்கு பாட்டு எழுதத் தெரியாதே ஸார்" என்றேன்.
"நீ எழுதுய்யா. அதுதான் பாட்டு".
வெற்றிமாறனைத் தனியாக அழைத்து சூழல் என்னவென்று கேட்டேன். அப்போதுதான் அவன் கூடுதலாக இந்தத் தகவலைச் சொன்னான்.
"சுகாவைக் கூப்பிடுவோம். மாட்டேன்னுதான் சொல்லுவான். ஆனா எழுத வச்சுடலாம். இளையராஜா வெற்றிமாறன் சுகான்னு நம்ம பேமிலி நேம்ஸ் இருந்தா நல்லா இருக்கும்" என்றாராம், பெரியவர்.
"பேப்பரும், பேனாவும் குடுடா" என்று வெற்றியிடம் கேட்டு வாங்கிக் கொண்டு பெரியவர் முன் அமர்ந்து சில வரிகள் எழுதிக் கொடுத்தேன்.
"ஓ ! Phrases ஆ எழுதிட்டியா?"
"ஆமா ஸார். எனக்கு இப்படித்தான் எழுத வருது. நீங்கதான் இதைப் பாட்டா மாத்திக்கணும்".
மாற்றினார். பாடினார். அதற்குப் பிறகு தனுஷைப் பாட வைத்தார். வணங்கினேன். விடைபெற்றுக் கொண்டேன். நாளை பாடல் வெளியீடு.
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா இசையில் தனுஷ் பாடும் இந்தப் பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!