
சம்பளம் தரவில்லை : உன்னி முகுந்தன் மீது பாலா புகார்
இதுபற்றி பாலா கூறும்போது, “எனக்கு பணம் முக்கியம் இல்லை.. என்றாலும் என்னுடன் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்புக்கு, பேசியபடி சம்பளத்தை சரியாக கொடுப்பதுதான் முறையாக இருக்கும். படத்தில் பணியாற்றியவர்களில் பெண் கலைஞர்கள் அனைவருக்கும் பணம் செட்டில் செய்யப்பட்டுவிட்டது. ஆண்களுக்குத்தான் பாக்கி சம்பளம் செட்டில் செய்யப்படவில்லை.
இந்த படம் கிட்டத்தட்ட 2 கோடி பட்ஜெட் என்கிற அளவிலே தான் எடுக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை 14 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்னேகால் கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த காரை வாங்க முடிகின்ற உன்னி முகுந்தனால், படத்தில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் எப்படி சம்பளம் சரியாக கொடுக்க முடியாமல் போனது.? இந்த படத்தில் பணியாற்றிய பிரபல நடிகர் சித்திக்கின் மகன் சாஹீனுக்கு கூட இன்னும் சம்பளம் கொடுக்கப்படவில்லை” என்று தனது மனக்குமுறலை குற்றச்சாட்டாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பாலா. அவரது இந்த பேட்டி மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் பாலாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குனர் அனூப் பந்தளம் என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு முதல் பட இயக்குனராகவும் கதாசிரியராகவும் எனக்கான சம்பளம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அவர்களுக்கான ஊதியம் சரியாக கொடுக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் பாலா நடித்துள்ள கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிபாரிசு செய்தவரே உன்னி முகுந்தன் தான்.. இந்த படத்தில் பாலா தன்னுடைய கேரக்டரை அவ்வளவு சிறப்பாக செய்துள்ளார்.. அவருக்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது.. இந்த நிலையில் அவர் இப்படி குற்றம்சாட்டியுள்ளதும், அதில் என்னுடைய பெயரை இழுத்துள்ளதும் வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!