
பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்புக்கு வர மறுக்கும் ஹீரோக்கள்? - ஐஸ்வர்யாராய்க்கு கூடுதல் காட்சிகள்
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திய போதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் சேர்த்து முடித்துவிட்டார்கள். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் சில புதிய காட்சிகளைப் படமாக்க மணிரத்னம் திட்டமிட்டாராம்.
படத்தின் மையக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்குக் கூடுதலாகக் காட்சிகளைச் சேர்க்க முடிவு செய்து அக்கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியை மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்தாராம். ஆனால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டதால் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் நீளமான முடியை வளர்க்க முடியாது என கார்த்தி மறுத்துவிட்டதாக ஒரு தகவல்.
சரி, விக்ரம், ஜெயம் ரவி கதாபாத்திரங்களை கொஞ்சம் நீட்டித்து படமாக்கலாம் என அவர்களிடம் பேசிய போதும் அவர்களும் கார்த்தி சொன்ன அதே காரணத்தை சொல்லி ஒதுங்கியிருக்கிறார்கள். எனவே, கதாநாயகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க தற்போது முடிவு செய்து அவரிடமும் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதற்காக படக்குழு விரைவில் மும்பை சென்று அங்கேயே காட்சிகளைப் படமாக்கப் போகிறார்களாம். எனவே இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் காட்சிகள் வரலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!