
யு டியூபைக் கலக்கும் மூன்று தலைமுறைப் பாடல்கள்
இன்றைய இளம் தலைமுறையை விதவிதமான இசை மூலம் சில இளம் இசையமைப்பாளர்கள் கவர முயற்சித்தாலும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் வந்துவிட்டால் அந்தப் பாடல் தனித்து தெரிவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படியான ஒரு பாடலாக கடந்த வாரம் வெளிவந்த "டோரத்தி" படத்தின் "கல்யாண விருந்து" பாடல் இருக்கிறது. இப்பாடல் இளையராஜாவின் அந்தக் காலப் பாடல்களை மீண்டும் ஞாபகப்படுத்தி அவரது ரசிகர்களை குதூகலத்துடன் கொண்டாட வைத்துள்ளது. யு டியூப் தளத்தில் இப்பாடல் தற்போது 5 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வைகளுடன் போய்க் கொண்டிருக்கிறது.
அடுத்து, இன்றைய 2 கே கிட்ஸ்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் "ஜெயிலர் 2" படத்தின் முதல் சிங்கிள் பாடலான, "அல்ல பொலேலோ" பாடல் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடலின் வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் அனிருத்தின் பாடல் எதையோ செய்து ரசிகர்களைக் கவர்ந்துவிடும். அது இந்தப் பாடலுக்கும் அமைந்துள்ளது.
இன்றைய ஜென் ஸி கிட்ஸ்களின் மனம் கவர்ந்த இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாய் அபயங்கர். அவரது இசையில் ஓரிரு படங்கள்தான் வெளியாகி இருக்கிறது என்றாலும் அவரது ஆல்பங்கள் மூலம் ரசிகர்களை இடைவிடாமல் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது அடுத்த ஆல்பமான "ரதிமா" பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சில விமர்சனங்களை இப்பாடல் முன் வைத்தாலும் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
யு டியுப் தளத்தில் இந்த மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களின் பாடல்கள் அவர்களது அபிமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!