
‛சண்டியர் தலைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு : தமிழகத்தை விட்டு கமல் ஓட வேண்டி வரும் என்கிறார் கிருஷ்ணசாமி
அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவும் இந்த டைட்டிலை வைக்கக் கூடாது எனத் தீவிரம் காட்ட, அதன் பிறகு வேறு வழியின்றி "விருமாண்டி" என அந்தப் படத்திற்கு டைட்டில் வைத்து வெளியிட்டார் கமல்ஹாசன். படமும் வெற்றி பெற்றது. அதேசமயம் அதற்குப் பின் வந்த வருடங்களில் வர்றார் சண்டியர்" மற்றும் "சண்டியர்" என்கிற பெயர்களிலேயே சில படங்கள் பிரபலமில்லாத நட்சத்திரங்கள் நடித்து வெளியாகின. அப்போது அந்தப் படங்களுக்கு எதிர்ப்பு எழவில்லை. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மீண்டும் இந்த டைட்டிலை வைத்திருப்பதால் எதிர்ப்பு எழுவதற்கு வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும் 20 வருடத்திற்கு முன்பு எதிர்த்த அதே டாக்டர் கிருஷ்ணசாமி இப்போதும் இந்த டைட்டிலை வைக்கக் கூடாது என தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.. இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "முன்னர் கடும் எதிர்ப்புகள் வந்தபோது சண்டியர் தலைப்பை கைவிட்ட கமல்ஹாசன், தற்போது மீண்டும் இதே தலைப்பைப் பயன்படுத்துவது அவரது அகந்தையைக் காட்டுகிறது. சண்டியர் போன்ற சொற்கள் சாதிய மோதல்களையும், வன்முறையையும், ஆதிக்க மனோபாவத்தையும் தூண்டக்கூடியவை. இதே பெயருடன் படம் வெளிவந்தால் நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டு அடிக்கடி வெளியேறும் சூழல் ஏற்படும்.. அதாவது அவர் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம், இப்போது ஆளுங்கட்சியின் முதலமைச்சராக இருக்கும் விஜய் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதாலும், இதுபோன்று பல அரசியல் எதிர்ப்புகளைச் சந்தித்துக் கஷ்டமான அனுபவங்களைப் பெற்றவர் என்பதாலும், கமலுக்கு சண்டியர் படம் வெளியாக அரசு ரீதியாக எந்தச் சிக்கலும் ஏற்படாமல் நிச்சயம் உதவுவார் என்று தெரிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் கமலிடம் நல்ல நட்புடன் இருக்கிறது. ஒருவேளை தணிக்கைச் சான்றிதழ் கொடுப்பதில் டைட்டில் சிக்கல் ஏற்படலாம் என்றால் கூட, இதற்கு முன்பு இதே போல ஏற்கனவே வெளியான சண்டியர் படங்களின் டைட்டிலை வைக்கச் சம்மதித்துச் சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். அதனால் சென்சார் பக்கமும் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் சண்டியர் டைட்டிலை கமல் மாற்றுவதற்கான தேவை இருக்காது என்றே தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…