
கேரளா பிலிம் சேம்பர் முடிவு : மாஸ்டர் படத்திற்குப் பின்னடைவு
பக்கத்து மாநிலமான கேரளாவில் ஜனவரி 5 முதல் தியேட்டர்களை 50 சதவீத பார்வைகயார்களுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தியேட்டர்காரர்கள் ஜனவரி 13 அன்று "மாஸ்டர்" படத்தைத் திரையிடுவதுடன் தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்திருந்தனர்.
அதே சமயம், கொரோனா காலத்தில் மூடுப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு வரி விலக்கு, மின் கட்டண சலுகை ஆகியவற்றிற்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, செஸ் வரி ஆகியவற்றையும் செலுத்தி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே வைத்து தியேட்டர்களைத் திறந்தால் அது தங்களுக்கு லாபகரமாக இருக்காது என கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்தது. எனவே, தியேட்டர்களைத் திறக்காமல் தொடர்ந்து மூடியே வைப்பது என முடிவெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கேரளாவில் ஜனவரி 13 முதல் "மாஸ்டர்" படத்தைத் திரையிட சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்கு சுமார் 200 தியேட்டர்கள் வரையிலும் படத்தைத் திரையிட முடிவு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத் தான் அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததும் "மாஸ்டர்" வெளியீட்டிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!