
அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி
“தடம் படத்திற்காக ஒரு மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஏனோ மேற்கொண்டு நகராமல் அப்படியே நின்று விட்டது. அதை தொடர்ந்து அருண் விஜய் என்னிடம் பேசும்போது அடுத்து உங்களுடன் மீண்டும் ஒரு படம் இணைந்து நடிக்க வேண்டும். அது ஆக்ஷன் படமாக இருக்க வேண்டும் என்றார். ஆனால் தடம் படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே இருந்தது. அதன்பிறகு என்னிடம் நேரில் வந்து கதையை கேட்ட அருண் விஜய் கதையின் தன்மையை உணர்ந்து தடம் படத்தில் நடிக்க இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவரே ஒரு தயாரிப்பாளரையும் எனக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார்.
திங்கட்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காக தயாரான சமயத்தில் தான் ஞாயிறு இரவு அந்த மிகப்பெரிய ஹீரோவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. லைக்கா நிறுவனத்திடம் தான் பேசி விட்டதாகவும் அங்கே சென்று கதையை கூறி மேற்கொண்டு விஷயங்களை பார்க்கும்படியும் சொன்னார். ஆனால் நான் அருண் விஜய்க்கு வாக்கு கொடுத்து விட்டதை கூறி அந்த ஹீரோவின் கோரிக்கையை வேறு வழியின்றி ஏற்க முடியாமல் போனது.
என்னைப் பொறுத்தவரை கொடுத்த வாக்கை சரியாக கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல எப்போதுமே நான் நன்கு பிரபலமான நடிகர்களுடன் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதனால் என்னுடைய அடுத்த படம் ஒரு மிகப்பெரிய ஹீரோவுடன் தான்” என்று கூறியுள்ளார் மகிழ்திருமேனி.
அப்படி தடம் படத்திற்காக இவர் கடைசி நேரத்தில் நிராகரித்த அந்த ஹீரோ யார் என்கிற பெயரையும் சொல்லவில்லை. அடுத்ததாக இவர் யார் படத்தை இயக்கப் போகிறார் என்பதையும் சொல்லாமல் சஸ்பென்சிலேயே வைத்து விட்டார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!