
பிளாஷ்பேக்: இயக்குனரான தயாரிப்பாளர் எஸ்.தாணு
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்.தாணு. சினிமா விநியோகஸ்தராக வாழ்க்கையை தொடங்கிய இவர் "யார்" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அதன் பிறகு ஏராளமான படங்களை தயாரித்தார். தற்போதும் சிம்பு நடிக்கும் "அரசன்", விஜய்சேதுபதி நடிக்கும் "டிரைன்" படங்களை தயாரித்து வருகிறார்.
ஆனால் தாணு ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி உள்ளார். அது விஜயகாந்த் நடித்த "புதுபாடகன்". இந்த படத்திற்கு அவரே இசை அமைக்கவும் செய்தார். இந்த படத்தில் விஜயகாந்துடன், அமலா, சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர், ராஜலட்சுமி, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர். தாணுவே தயாரித்தும் இருந்தார்.
அப்போது பிசியாக இருந்த விஜயகாந்த், ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. இதனால் விஜயகாந்திடம் 25 நாள் கால்ஷீட் கையில் இருந்தது. இந்த நேரத்தில் அவர் தாணுவை அழைத்து இந்த இடைவெளியை நீங்கள் வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
அப்போது தாணு கையில் கதையோ, இயக்குனரோ, இசை அமைப்பாளரோ இல்லை, அவர்களை புக் செய்ய உரிய நேரமும் இல்லை. இதனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அவர் எழுதி வைத்திருந்த கதையை அவரே இயக்கி, இசை அமைக்க முடிவு செய்தார். அதுதான் இந்த படம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!