
பிளாஷ்பேக் : பாண்டிபஜாரில் புத்தகம் விற்ற நடிகை
படிப்பிற்கு பிறகு ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினார், பணி நேரம்போக மீதமுள்ள நேரத்தில் பாண்டிபஜார் சாலையில் புத்தகங்களை விற்றார். பின்னர் மாடலிங் துறையில் இணைந்தார். விளம்பர படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டு, பத்திரிகை விளம்பரங்களுக்கு மட்டும் போஸ் கொடுத்தார்.
இந்த விளம்பரங்களில் ஒன்றை பார்த்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அவரது பெற்றோர்களிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் காதல் காட்சியோ, நாயகன் கட்டிபிடிக்கும் காட்சியோ கடைசி வரை இல்லை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் "இதயம்". அந்த நடிகை ஹீரா.
ஹீரா நடித்த இரண்டாவது படமான "நீ பாதி நான் பாதி" படத்தை வசந்த் இயக்க, கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. அதனைத் தொடர்ந்து, சரத்குமாருக்கு ஜோடியாக நான்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார். மணிரத்னம் இயக்கிய "திருடா திருடா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ராஜ் சிப்பி இயக்கிய "அமானத்" படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்; இதில் சஞ்சய் தத் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
அன்றைக்கிருந்த முதன்மை ஹீரோக்கள் பலர் ஹீராவை காதலித்தனர். ஆனால் ஹீரா யாருடைய காதலையும் ஏற்கவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. துணை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஒரு கட்டத்தில் திரைப்படத்துறையில் இருந்து விலகினார். திருமணமாகி செட்டிலானார். "தவிர்க்க முடியாத அழுத்தங்களுக்கு அடிபணிய விரும்பாததே நான் சினிமாவில் இருந்து விலக காரணம்” என்று ஹீரா பின்னாளில் தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…