
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தில் நடிக்க இது தான் காரணம் : பஹத் பாசில்
இந்த விழாவில் பேசிய நடிகர் பஹத் பாசில் பேசுகையில், ""இந்தக் கதையை கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும் தான் எப்போதும் நினைவில் இருக்கிறது. அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் "இரண்டு கதைகளை மட்டும் அனுப்பி இருக்கிறேன். இந்த இரண்டில் எந்தக் கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே" என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன். இரண்டு கதைகளும் பிடித்திருந்தது. இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன். அப்போதுதான் அவர், "நான் தான் தயாரிக்கிறேன்" என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு விசயம் சொன்னார். "இந்த படத்தை ராஜமவுலி தான் வழங்குகிறார்" என்றார். அப்படி சொன்னவுடன் என்னை விட வேறு சிறந்த நடிகர்களை வைத்து தயாரிக்கலாமே..! என சொன்னேன்.
இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன். இந்தப் படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன். நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன். படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி.
என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை அனைவரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மிகவும் சிறப்பான படம். இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!