விமர்சனம்
கௌதமன் மேல் பாசத்தை கொட்டும் அக்காவாக கார்த்திகா சிளிபோல வளர்க்கப்பட்ட அவருக்கு பூனை மாதிரி வாய்த்த கணவனாக சம்பத் என சிலர் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மேல்சாதியை சேர்ந்த கௌதமனுக்கும் தலித் தோழராக வரும் சீமானுக்குமான நட்பு, கிராமத்தில் சந்திக்கும் பிரச்னைகளில் உண்மை கன்னத்தில் அறைகிறது. நிர்க்கதியாக நிற்கும் கார்த்திகாவுக்கும் சீமானுக்கும் விழுகிற திருமண முடிச்சை மேல்சாதியின் பெருந்தன்மையாக காட்டாமல் யதார்த்தத்தின் கட்டாமயமாக காட்டியிருப்பது, நாவலாசிரியரும், இயக்குநரும் சேர்ந்து ஜெயிக்கிற இடம்.
ஒரே ஊரில் இருந்தாலும் கௌதமன் வில்லனின் குணம் தெரியாமல் கார்த்திகாவை முதலில் கட்டிக்கொடுப்பது எப்படி, கணவனின் கொடுமைகளை கார்த்திகா யாரிடமும் சொல்லாதது எப்படி. இப்படி படம் முழுவதும் நமக்கு பல எப்படி? நல்ல கதை என்றாலும் அதை சோர்வடைய வைக்காமல் சொல்வதும் முக்கியம் இல்லையா?
வித்யாசாகரின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்கு முடிந்தவரை பலம் சேர்க்கிறது. எக்கச்சக்கமாய் படம் எடுத்து விட்டு அதிரடியாய் குறைக்க சேர்ந்த சங்கடம் எடிட்டிங்கில் தெரிகிறது.
மொத்த கதைக்கே அடித்தளமாக இருக்கும் நட்டார் தெய்வ வரலாற்றை ஒரு படக்கதையாக காட்டுவதில் இருக்கும் நறுக்கும் சுருக்கும் படம் முழுக்க இருந்திருக்க வேண்டாமா?
குமுதம் ரேட்டிங் - ஓ.கே.
---------------------
கல்கி விமர்சனம்
எத்தனை நாளாயிற்று இப்படி ஒரு படம் பார்த்து. அக்கா தம்பி பாசம்தான் கதை (நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவல்) தந்திருக்கிறார் இயக்குநர் வ.கௌதமன். வ.கௌதமன் - அஞ்சலி காதல் காட்சிகளின் போதெல்லாம், ஹே...இந்த மாதிரி காதலை நாம் ஊர்லேயும் பார்த்திருக்கிறோமே... என்று மனத்துக்குள் ஃப்ளாஷ்பேக் ஓடுகிறது. அதுதான் படத்துக்குப் பலமே! அக்காவாக கார்த்திகாவும், தம்பியாக கௌதமனும் நடித்திருக்கும் காட்சிகளிலெல்லாம் நமக்குள்ளும் நெகிழ்ச்சி ததும்புகிறது.
நாஞ்சில் நாட்டில் நடக்கும் கதை என்பதால் காட்சிக்குக் காட்சி செழியனின் கேமராவில் பசுமைன்னா அப்படியொரு பசுமை. கௌதமனின் அப்பா பாத்திரத்தில் நடித்திருப்பவர், ஊர்ப்பெரிசுகள் என... பாத்திரங்களின் தேர்வில் இயக்குனரின் ஆளுமை பளிச்சிடுகிறது. விற்பனைக்குப் போகும் வயலின் நாற்றைக் கட்டிப்பிடித்து அழுகின்ற காட்சி ஒன்றே போதும் மண்ணின் நேசத்தை உணர்த்த! கஞ்சாகருப்புவின் காமெடி, சீமானின் நடிப்பு... படத்துக்கு பக்கபலம். இசையும் (வித்யாசாகர்) திரைக்கதையும் கதம்பமாக மணக்கின்றன. ஆங்காங்கே தலை துõக்கியிருக்கும் வியாபாரத் தனங்களைக் கவனமாக ஒதுக்கியிருந்தால் மகிழ்ச்சி இன்னும் கூடுதலாகி இருக்கும்.
மகிழ்ச்சி - மண் வாசம்






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!