2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தீரஜ், துஷாரா, பிரதாயினி
தயாரிப்பு - ரைஸ் ஈஸ்ட்
இயக்கம் - சந்துரு கேஆர்
இசை - கேபி
வெளியான தேதி - 12 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் போதைப் பொருளை மையமாக வைத்து அதிகப் படங்கள் வந்ததில்லை. அப்படியே வந்த ஒரு சில படங்களும் போதைப் பொருள் கடத்தல் என்பதை மட்டும் வைத்து ஆக்ஷன் படங்களாகத்தான் வந்திருக்கின்றன.

படத்தின் கதாநாயகன் போதைப் பொருளைப் பயன்படுத்தி அதனால் அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது மாதிரியான படங்கள், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைச் சொல்லி வந்த படங்கள் மிக மிகக் குறைவு.

இயக்குனர் சந்துரு கேஆர், இந்தப் படத்தில் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். புதுமுக நடிகரை நாயகனாக நடிக்க வைத்து இப்படி ஒரு கதையைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும். அதற்காக இயக்குனரைப் பாராட்டலாம்.

நாயகன் தீரஜ் மறுநாள் திருமணமாக உள்ள நிலையில் நண்பர்களைப் பார்க்க அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்கிறார். நண்பர்கள் அனைவரும் குடித்துக் கொண்டிருக்க பேச்சு போதைப் பொருள் பற்றி நகர்கிறது. அப்போது ஒரு நண்பர் தன்னிடம் போதைப் பொருள் இருப்பதாகச் சொல்கிறார். அதைப் பயன்படுத்துவது போல் விளையாட்டாக வீடியோ எடுத்து தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் துஷாராவுக்கு அனுப்ப நினைக்கிறார். ஆனால், தெரியாமல் அவர் அந்த போதைப் பொருளை இழுத்து விடுகிறார். உச்ச கட்ட போதைக்குச் செல்கிறார் தீரஜ். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தீரஜுக்கு இது முதல் படம். ஆனால், அறிமுக நடிகர் போல இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். குடித்தவராக நடிக்க வேண்டும் என்றால் கூட நடித்துவிடலாம். ஏனென்றால், அப்படி இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை தன் நடிப்பில் மூலம் உணர்த்துகிறார் தீரஜ். நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் இவரும் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.

தீரஜ் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணாக துஷாரா. மொத்தமாக இரண்டே இரண்டு காட்சியில்தான் வருகிறார். போதைப் பொருள் கடத்துபவர்களைப் பற்றி கண்டுபிடித்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக பிரதாயினி. இவருக்கு ஒரு நான்கு காட்சிகள் இருக்கும். படத்தில் கதாநாயகிகளுக்கான பங்கு அவ்வளவே.

தீரஜ் நண்பர்களாக நடித்திருப்பவர்களுக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லாதவர்கள் போல இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் மொடாக்குடியர்களாக, லோக்கலாக இருக்கிறார்கள். மேலும் தீரஜ்ஜை விட வயதானவர்கள் போலத் தெரிகிறார்கள். அவர்களில் அர்ஜுனன் மட்டும்தான் தெரிந்த முகமாக இருக்கிறார். ராதாரவி, சார்லி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

படத்தின் பின்னணி இசை கேபி. ஓரிரு பாடல்கள் மட்டும் படத்தில் இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் ஒளிப்பதிவு செய்த படம் போல இல்லை.

ஒரு வீட்டுக்குள்ளேயே முழு கதையும் நகர்கிறது. அதுவே படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயின்டாக அமைந்துவிடுகிறது. மேலும், வெளியில் பிரம்மாண்டமான அபார்ட்மென்ட்டாக காட்டிவிட்டு, உள்ளே ஒரு சாதாரண வீடு போல வடிவமைத்திருக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு குறும்படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.

இருந்தாலும் போதைப் பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக மட்டும் குழுவினரைப் பாராட்டலாம்.

போதை ஏறி புத்தி மாறி - தெளிவில்லை

 

பட குழுவினர்

போதை ஏறி புத்தி மாறி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓