2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா சுரேஷ்
தயாரிப்பு - பிரினிசிஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - சேரன்
இசை - சித்தார்த் விபின், சபேஷ் முரளி
வெளியான தேதி - மார்ச் 1, 2019
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளைப் படமாக்கினால் இப்போதெல்லாம் உடனே அவற்றை டிவி சீரியல் மாதிரி இருக்கிறது எனச் சொல்லும் ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. இப்படித்தான் கடந்த வருடம் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பற்றியும் பேசினார்கள். அந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்று நல்ல லாபத்தையும் கொடுத்தது.

சேரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திருமணம் படமும் ஒரு குடும்பக் கதைதான். ஆனால், படத்தில் ஸ்டார் வேல்யூ என்ற அம்சம் குறைவாக இருப்பதால் அது ரசிகர்களை ஈர்ப்பதற்கு சிரமம் இருக்கும். அதை மீறி சேரன் படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்று நினைத்து தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு இந்தப் படம் திருமணம் பற்றிய உண்மையை புரிய வைத்து அனுப்பும்.

வருமானவரித் துறையில் இளநிலை அதிகாரியாக இருப்பவர் சேரன். அவருடைய ஒரே தங்கை காவ்யா சுரேஷ். ஜமீன் குடும்ப பரம்பரையைச் சேர்ந்தவர் சுகன்யா. அவருடைய ஒரே தம்பி உமாபதி. காவ்யா, உமாபதி இருவரும் காதலர்கள். வீட்டுப் பெரியவர்களிடம் தங்கள் காதலைச் சொல்லி திருமண ஏற்பாட்டை ஆரம்பிக்கிறார்கள். முதலில் சரியாக ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை, திருமணம் உறுதி செய்யப்பட்டபின் மண்டபம், அலங்காரம், அழைப்பிதழ், சாப்பாடு, உடைகள் ஆகிய தேர்வில் அடுத்தடுத்து கருத்து வேற்றுமை வந்து ஒரு கட்டத்தில் திருமணமே நிறுத்தப்படுகிறது. பின்னர் அவர்கள் திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சேரனின் நடுத்தரக் குடும்பத்திற்கும், சுகன்யாவின் ஜமீன் குடும்பத்திற்கும் இடையே உள்ள வாழ்க்கை முறை வித்தியாசம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை சிலபல காட்சிகளில் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்துவிடுகிறார் சேரன். பல குடும்பங்களில் இப்படிப்பட்ட கருத்து வேற்றுமையால் தான் விவகாரத்து வருகிறது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் கணக்குப் பார்த்து வாழும் குடும்பமும், தாராளமாக செலவு செய்யும் குடும்பமும் எப்படி இருக்கின்றன, அதனால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் யோசிக்க வேண்டியவை.

படத்தில் இவரைத்தான் நாயகன், நாயகி என குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருக்குமே முக்கியத்துவம் உள்ளது.

வருமான வரித்துறையில் இளநிலை அதிகாரியாக இருக்கும் சேரன், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்த பின் அவர்களது வருமானத்தைக் கேட்டு உடனே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பச் சொல்லும் அளவிற்கு ஒரு நேர்மையான அதிகாரி. சிறு வயதில் கஷ்டத்தை அனுபவித்து வளர்பவர்கள் பின்னர் எப்படியெல்லாம் இருப்பார்கள் என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் சரியான உதாரணம். தன்னுடைய கணக்கு பார்க்கும் குணம் எப்படியெல்லாம் பணத்தை மிச்சப்படுத்துகிறது என்பதற்கு அவர் கிளைமாக்சில் கொடுக்கும் விளக்கம் அருமை. முந்தைய படங்களில் கொஞ்சம் ஓவராகவே நடித்த சேரன் இந்தப் படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார்.

ஜமீன் வீட்டுப் பரம்பரையில் இருக்கும் பணக்கார அக்காவாக சுகன்யா. படத்தின் பில்லர் என இவரை தாராளமாகச் சொல்லலாம். தம்பி மீது வைத்துள்ள அதிகமான அன்பு, சேரன் செய்யும் கஞ்சத்தனமான விஷயங்களுக்கு அவரை அவமானப்படுத்தும் விதம், சித்தப்பா எம்எஸ்.பாஸ்கரிடம் காட்டும் பாசம் என காட்சிக்குக் காட்சி அசரடிக்கிறார். தமிழ் சினிமா இத்தனை காலமும், இந்த அளவிற்கு அழுத்தமான கதாபாத்திரத்தைக் அவருக்குக் கொடுக்காமல், ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையை இழந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

உமாபதிக்கு காதலிப்பதைத் தவிர வேறு வேலை அதிகமில்லை. வசனத்தை உச்சரிப்பதில் கொஞ்சம் பயிற்சி எடுப்பது நல்லது. சில வசனங்கள் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அவரின் காதலியாக காவ்யா சுரேஷ். நடனமாடத் தெரிந்தவர் என்பதால் அவருக்காக பரதநாட்டிய நடனத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் காணாமல் போன பரதநாட்டியத்தை 2019 படத்தில் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அம்மா, அண்ணன் மீது வைத்துள்ள பாசத்தை வேஷமில்லாமல் வெளிப்படுத்துகிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் சேரனின் அம்மாவாக நடித்திருக்கும் மலையாள நடிகை சீமா நாயர், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள புது அம்மா. இவருக்கு பாத்திமா பாபு பொருத்தமான டப்பிங்கைப் பேசியிருக்கிறார். எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் தத்தம் குடும்பப் பின்னணியைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் காட்சியில் நெகிழ வைக்கிறார்கள். லஞ்சம் வாங்கக் கூடாது என்பதைச் சொல்வதற்காக ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரம்.

சேரனின் படங்கள் என்றாலே பாடல்கள் இனிமையாக இருக்கும். இந்தப் படத்தில் பாடல்கள் சுமார் ரகம் கூட இல்லை. ஆரம்பத்தில் உள்ள பேஸ்புக் நண்பர்கள் பாடலும், இடைவேளைக்குப் பின் வரும் பரதநாட்டியப் பாடலும் கதைக்கு வேகத் தடைகள். பாடல்களுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். சபேஷ் முரளி பின்னணி இசை.

வீட்டுக்குள் பல காட்சிகள் நகர்ந்தாலும் அதைத் தெளிவான அழகுடன் படம் பிடித்திருக்கிறது ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு. படத்தின் நீளம் அதிகம். இரண்டு பாடல்கள், சில காட்சிகளை நீக்கினால் படத்திற்கு விறுவிறுப்பு சேர்க்கும்.

சேரன் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் உண்மையாக இருப்பினும், சில விஷயங்கள் ரொம்ப ஓவர் ஆகவும் இருக்கின்றன. கணக்கு பார்த்து வாழ வேண்டும்தான், ஆனால், ஒரு குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்காக ஏழைகள் கூட சாப்பாட்டிற்குக் கணக்குப் பார்க்க மாட்டார்கள். திருமணத்திற்கு வருபவர்களை வயிறாரா சாப்பிட்டுவிட்டுத்தான் போகச் சொல்வார்கள். சாப்பாடு வீணாகக் கூடாதுதான், அதற்காக மொய், டோக்கன் என்றெல்லாம் சொல்லியிருப்பது கொஞ்சம் அவமானகரமான விஷயம்தான்.

இந்தக் காலத் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் படத்தில் இருக்கிறது. அதற்கு தாராளமாக திருமண மொய் கொடுக்கலாம்.

திருமணம் - விருந்து, கொஞ்சம் ருசி குறைவுடன்...!

 

திருமணம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

திருமணம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓