4

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபாலா, கிறிஸ் எவன்ஸ், ஸ்கேர்லெட் ஜான்சன், டான் செடேல், டாம் ஹாலண்ட், எலிசபத் ஆல்சன், ஆண்டனி மெக்கி, செபாஸ்டியன் ஸ்டான் உள்ளிட்ட இன்னும் பலர்...

இயக்குநர் :
ஜோ ரஜோ, ஆண்டனி ரஸோ

தயாரிப்பு : மார்வெல் ஸ்டுடியோஸ்

ஹாலிவுட்டில் வருடத்திற்கு ஒரு படமாவது உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் பட ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் வந்துவிடும். அப்படி வெளிவந்துள்ள படம் தான் இந்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படம்.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் 18 ஹாலிவுட் படங்களைப் பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் இந்த அவெஞ்சர்ஸ் படம் கொஞ்சமாவது புரியும்.

ஐயன் மேன், ஐயன் மேன் 2, ஐயன் மேன் 3, த இன்கிரெடிபிள் ஹல்க், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், தி அவெஞ்சர்ஸ், தோர், தோர் ராக்நரோக், தோர் - தி டார்க் வேர்ல்டு, ஆன்ட் மேன், கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி, கார்டியன்ஸ் ஆப் த கேலக்சி - 2, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன் ஹோம் கமிங், கேப்டன் அமெரிக்கா சிவில் வார், கேப்டன் அமெரிக்கா தி வின்டர் சோர்ஜெர், கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் அவெஞ்சர், பிளாக் பாந்தர் ஆகிய 18 படங்களைப் பார்த்திருந்தால் தான் இந்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் கதாபாத்திரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

விண் கல், உண்மைக் கல், சக்திக் கல், மனம் கல், ஆன்மா கல், நேரம் கல் என இந்த பிரபஞ்சத்தின் பல கிரகங்களில் இருக்கும் கற்களை எடுத்து தன் கையில் இருக்கும் ஒரு கவசத்தில் பொருத்திக் கொண்டால் இந்தப் பிரபஞ்சத்தையே ஆளும் வல்லமை டைட்டன் கிரகத்தைச் சேர்ந்த தானோஸ் என்பவனுக்குக் கிடைக்கும். அந்தக் கற்களை அடைய அவன் பல போர்களை நடத்துகிறான். அவற்றை அவெஞ்சர்ஸ் குழுவினர், கார்டியன்ஸ் ஆப் கேலக்சி குழுவினர் ஒன்று சேர்ந்து தானோஸை எதிர்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் உள்ள ஒரு சில சூப்பர் ஹீரோக்களைத் தவிர மற்ற ஹீரோக்கள் இந்த அவெஞ்சர்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஐயன் மேன், ஸ்டார் லார்டு, தோர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன், ஹல்க், டிராக்ஸ், ராக்கெட், குரூட், எமோரா, விஷன், பிளாக் பாந்தர் ஆகியோர் இந்த அவெஞ்சர்ஸ் படத்தின் சில முக்கிய கதாபாத்திரங்கள். இவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது தனிப்பட்ட சக்தியால் தானோஸை எப்படி எதிர்க்கிறார்கள் என்பது அவர்களது சூப்பர் ஹீரோயிசத்தைக் காட்டுகிறது.

இருப்பினும் படத்தில் தானோஸ் தான் அதிக நேரம் வருகிறார். அவருக்கு அடுத்து தோர், ஐயன் மேன் ஆகியோர் வருகிறார்கள். மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு குறைந்த நேரமே அவர்களது ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

படத்தில் நோவேர், டைட்டன், வார்மிர், ஜென் வொபேரி, நிடவெளிர் ஆகிய கிரகங்கள் தனித் தனியாக கிராபிக்ஸ் மூலம் மிரள வைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளன.

நிடவெளிர் கிரகத்தில் தானோஸை அழிக்க ஒரு பிரம்மாண்டமான சக்தி வாய்ந்த சுத்தியலை அந்த கிரகத்தைச் சேர்ந்த குள்ள மனிதன் ஈட்ரி உருவாக்கித் தரும் காட்சி அதிசயிக்க வைக்கின்றன.

ஆப்பிரிக்க பழங்குடி நாடாக வொகான்டா-வில் தானோஸ் ஆட்களுக்கும், அவெஞ்சர்ஸ் ஹீரோக்களுக்கும் நடக்கும் சண்டை பிரம்மாண்டத்தின் உச்சம். எப்படி இப்படியெல்லாம் படமாக்கினார்கள் என்று வியக்க வைக்கும்.

இடைவேளை வரை வசனக் காட்சிகள் கொஞ்சம் அதிகம்தான். இடைவேளைக்குப் பின்னர்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. வில்லன் தானோஸ் தன்னை எதிர்த்த சில சூப்பர் ஹீரோக்களுக்கு என்ன முடிவு தருகிறான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் நடித்தாலே யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் சண்டை, சச்சரவு வரும். இந்தப் படத்தில் இத்தனை சூப்பர் ஹீரோக்களை வைத்துக் கொண்டு, வலிமையான வில்லனை வைத்துக் கொண்டு அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜோ ரஜோ, ஆண்டனி ரஸோ.

மார்வெல் ஸ்டுடியோசின் மகத்தான தயாரிப்பாக இந்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 200 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - பிரம்மாண்டத்தின் உச்சம்!

 

பட குழுவினர்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (ஹாலிவுட்)

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓