கிரேஸி மோகன் என்று அழைக்கப்படும் மோகன் ரங்கமாச்சாரி, பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது வசன கர்த்தா மற்றும் நாடக எழுத்தாளர். இன்ஜினியரிங் படித்த இவர் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்த போது 1972ம் ஆண்டு தனது முதல் நாடகத்தை எழுதினார். தனது நண்பர் அளித்த ஊக்கம் காரணமாக கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி தமிழகம் மட்டுமின்றி உலகம் மழுவதும் 5000க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். நகைச்சுவை நாடகங்கள் மட்டுமின்றி டிவி சீரியல்களையும் தயாரித்து, நடித்த இவர் மைக்கல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., அருணாச்சலம், சதிலீலாவதி, பூவெல்லாம் கேட்டுப்பார், சின்ன மாப்பிள்ளை, காதலா காதலா, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.