குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
நடிகனாக இயக்குநராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு ஜெயித்து காட்டியவர் சமுத்திரகனி. பாலசந்தர், அமீர், சசிகுமார் என்று அவரின் திறமைக்கான அடையாளங்களுக்கு மெருகு போட்டவர் பலர். இப்போது வாத்தியார் என்ற முறுக்கு மீசையோடு, புதுமுக இயக்குநர் அன்பழகனின் இயக்கத்தில், சமுத்திரகனியின் அசத்தலான நடிப்பு, அனைவரையும் அவரவர் வாத்தியாரை நினைவுப்படுத்தி உள்ளது. அழகான மதிய வேளையில் கனியுடன் ஒரு சந்திப்பு...
நெறஞ்ச மனசு படம்மூலம் சினிமா அறிமுகம், சின்னத்திரை பெரியதிரை என்று அத்தனையிலும் நான் பயின்ற சினிமா என்னை ஒவ்வொரு நாளும் ஏதோ புதிய ஒன்றை கற்றுக்கொள்ள வைத்தது. நான் என் கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அலுவலகத்திலும் வாய்ப்பு கேட்டு அலைந்ததை ஒருநாளும் மறக்க முடியாது. அதை இப்போதும் நினைத்தாலும் கண்ணீர் வரும். சினிமாவில் ஜெயிக்க வலிகளை அதிகம் பொறுத்து கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பிற்கு நிச்சயம் ஒருநாள் பலன் உண்டு. சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்னை மேலும் அடையாளப்படுத்தின. இப்போது பள்ளிக்கூட வாத்தியாராக என் பயணம் தொடரும் படம் சாட்டை.
இந்தபடத்தின் கதை கேட்கும் போதே நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு பிரபுசாலமனுக்கு தான் நன்றி சொல்கிறேன். சாட்டை படத்தில் நடித்த போது என் வாத்தியார் தான் எனக்கு நினைவுக்கு வந்தார்கள். 7ம் வகுப்பிலேயே நான் வகுப்பு நோட்டில் கதை எழுத தொடங்கிவிட்டேன். அதுவும் ஆங்கில நோட்டில். இப்படியாக என் பயணம் தொடங்கியது. சாட்டை படத்தில் தயாளன் என்ற ஆசிரியர் எப்படி இருக்கணும் என்று இயக்குநர் மனதில் வைத்திருந்தாரோ அதை அப்படியே செய்தேன். எந்த கேள்வியும் கேட்கல. சொல்லப்போனால் நான் சட்டையை இன்ஷெர்ட் பண்ணமாட்டேன். அது என்னுடைய பழக்கம். ஆனால் இந்தபடத்தில் சட்டையை இன் பண்ணி ஒரு நேர்மையான வாத்தியாராக எப்படி இருக்கணுமோ அதை போல இருந்தேன்.
சினிமாவில் கதை களம் சமுகத்துக்கு ரொம்ப முக்கியம். அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை வைத்து ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். இந்தபடம் இப்போதைய தேவை. மேலும் படம்பார்த்த பலரும் எனது நடிப்பை பாராட்டி பேசுகின்றனர். ஒன்றுமட்டும் சொல்கிறேன். எந்த வெற்றியையும் தலைக்கு ஏற்றி கொள்ள கூடாது என்பது என் விருப்பம். செய்யும் வேலையை பார்த்தாலே போதும். நான் பிறவி நடிகன் அல்ல, ஏதோ என்னால் முடியும் என்று நடிக்க கூப்பிடுகிறார்கள், நானும் செய்து பார்க்கிறேன். சாட்டை படத்திற்கு அடுத்து சீனுராமசாமியின் நீர்ப்பறவை படத்தில் நடித்து வருகிறேன். போராளி படத்தை கன்னடத்தில் புனித், பாவனாவை வைத்து இயக்கி வருகிறேன். இந்தப்படம் முடியும் நிலையில் உள்ளது. அடுத்து ஜெயம் ரவி-அமலாபாலை வைத்து நிமிர்ந்து நில் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குகிறேன். இன்னும் ஒருபாட்டு மட்டுமே உள்ளது. இப்படியாக என் படைப்பு பயணம் ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.
எனக்கு 100 படம் நடிக்க வேண்டும் என்று ஆசையில்லை, சமூகத்துக்காக நடித்தாலே போதும் என்று ஆசைப்படுபவன் நான். இப்போது தமிழ் சினிமாவில் நிறைய புது கதைகளோடும், புதுமுகங்களோடும் வருவது வரவேற்கத்தக்கது. நான் அடுத்து பிலிம் பார்ம்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளேன். அநேகமாக சாட்டை இயக்குநர் அன்பழகன் அடுத்து இயக்க போகும் படம் எனது தயாரிப்பில் தான் இருக்கும் என்று பேசி முடித்த சமுத்திகனியின் கண்களில் ஆயிரம் நம்பிக்கைகளை பார்க்க முடிந்தது.
உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் கனி...!!