வடிவேலுவின் காமெடி டீமில் இருந்தவர் நடிகர் சிங்கமுத்து. தற்போது தனியாக நடித்து வருகிறார். வடிவேலுவிடம் இருந்தபோது அவருக்கு பல சொத்துக்களை வாங்கிக் கொடுத்தார் சிங்கமுத்து. அவர் வாங்கிக் கொடுத்த நிலம் ஒன்றின் காரணமாக வடிவேலுக்கும், சிங்கமுத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர். ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ராமச்சந்திரன் என்பவர் தனது 34 செண்ட் நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாததால் நிலம் ஏலத்துக்கு வந்தது. அதனை பழனியப்பன் என்பவர் ஏலத்தில் எடுத்தார்.
பழனியப்பன் வசம் நிலம் இருக்கும்போதே உரிமையாளர் ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது உறவினர்கள், அந்த இடத்தை விற்கும் உரிமத்தை நடிகர் சிங்கமுத்துக்கு வழங்கினர். அவர் அதனை வடிவேலுக்கு விற்றார். இதனால் நிலத்தை ஏலம் எடுத்த பழனியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வடிவேலுவும் போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் நிலத்தை விற்றதாக கூறி 3 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வடிவேலுவும், பழனியப்பனும் ஆஜர் ஆனார்கள். நிலப் பிரச்சினையில் தாங்களே பேசி சமரசம் செய்து கொண்டதாகவும், இருதரப்பும் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தனர். இதனால் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.