செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான படம் 'ரோஜா'. 25 வருடங்களுக்கு முன்னால் ஆகஸ்ட் 14, 1992ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. வித்தியாசமான கதைக்களமும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் புதிய அலையை ஏற்படுத்தி இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக இந்தப் படம் அமைந்தது.
'தளபதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி, 'ரோஜா' படத்தில் தனி நாயகனாக நடித்து தனது நடிப்பால் ரசிகைகளை அதிகம் கவர்ந்தார். 80களில் அதிக ரசிகைகளை வைத்திருந்த கார்த்திக்-குக்குப் பிறகு அரவிந்த்சாமிதான் ரசிகைகளை அதிகம் கவர்ந்த ஒரு ஹீரோவாக உயர்ந்தார். ஆனால், அவர் நீண்ட வருடங்கள் அதை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான காதல், பிரிவு அதன் பிறகு அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் என்பதை காஷ்மீர் தீவிரவாதத்தின் பின்னணியில் வித்தியாசமான கதையுடன் ஒரு பரபரப்பான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்தார் இயக்குனர் மணிரத்னம். இளையராஜாவின் இசையை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்த இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் ஒலியமைப்பில் காட்டிய தொழில்நுட்பம் வியக்க வைத்து அவருக்கென தனி ரசிகர்களை உருவாக்க ஆரம்பித்தது.
அரவிந்த்சாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ், பங்கஜ் கபூர், வைஷ்ணவி அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். 1992ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய ஒற்றுமையை வலியுறுத்திய படம், வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியர் விருது, ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என மூன்று தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ளியது. 25 வருடங்கள் ஆனாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கியமான படமாக 'ரோஜா' படம் இன்றும் வாசம் வீசிக் கொண்டிருக்கிறது.