அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அந்தக்கால ஆக்ஷன் ஹீரோ. அவர் நடிப்புக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்த படங்களில் ஒன்று தான் கலங்கரை விளக்கம். சில சண்டை காட்சிகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர் யதார்த்தமான வழக்கறிஞராகவும், புத்திசாலியான இளைஞராகவும் நடித்திருப்பார். 1965ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் எங்க வீட்டு பிள்ளையும், அடிமைப்பெண்ணும் வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது. சரோஜாதேவி, கோபாலகிருஷ்ணன், நம்பியார், நாகேஷ், மனோரமா ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
கோடீஸ்வரரின் மகள் சரோஜாதேவி. வரலாற்று படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் மன்னர்கள் பற்றி ஆராய்ச்சியும் செய்கிறார். ஒரு விபத்தில் சிக்கும் சரோஜாதேவிக்கு மூளை குழம்பி விடுகிறது. தன்னை பல்லவ மன்னனின் காதலி ஆடலரசியாக கருதிக் கொண்டு பல்லவ மன்னன் ஆடலரசியை சந்தித்த கலங்கரை விளக்கத்துக்கு நடு இரவில் சென்று நடனமாடுகிறார். (சந்திரமுகியாக மாறி ஜோதிகா ஆடுகிற மாதிரி). அவரை குணப்படுத்த வருகிறார் மனோதத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன். அவருக்கு உதவியாக வருகிறார் வழக்கறிஞர் எம்.ஜி.ஆர்.
கோபாலகிருஷ்ணனின் திட்டப்படி கலங்ககரை விளக்கத்தில் நடனமாடும் சரோஜாதேவியை தான்தான் பல்லவ மன்னன் என்று நம்ப வைக்கிறார் எம்.ஜிஆர். (ரஜினி தான்தான் வேட்டைய மன்னன் என்று ஜோதிகாவை நம்ப வைப்பது போன்று) அதுவே இருவருக்குள்ளும் காதலாகிறது.
இதற்கிடையில் சரோஜாதேவியை கொன்று சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார் அவரது சித்தப்பா நம்பியார். அவரைப்போலவே தோற்றம் கொண்ட இன்னொரு சரோஜாதேவியை அவர் பயன்படுத்துகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை.
கதை களம் மகாபலிபுரம். நாகேசும் மனோரமாவும் மகாபலிபுரம் கைடாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன் பாடல்களை எழுதியிருந்தனர்.
"சங்கே முழங்கு..." என்ற பாடலும், "நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...", "என்னை மறந்ததேன் தென்றலே...", "பொன்னெழில் பூத்தது புது வானில்..." போன்ற பாடல்களை இப்போது கேட்டாலும் மெய்மறந்து ரசிக்கலாம். எம்.ஜி.ஆர் தனது இமேஜ் என்கிற கிரீடத்தை கழற்றி வைத்து விட்டு கதையின் நாயகனாக நடித்த இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு கலங்கரை விளக்கம்தான்.