சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சென்னை:போலி ஆவணம் தயாரித்து, 19கோடி ரூபாய்மோசடி செய்த வழக்கில், டில்லியில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பால்,நேற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில், போலி ஆவணம் தயாரித்து, 19 கோடி ரூபாய் கடன் பெற்றுமோசடி செய்தது தொடர்பாக, அண்ணா நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் பாலசுப்ரமணியன், சித்ரா ஆகியோரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஒரு மாதத்துக்கு முன், கைது செய்தனர். இதற்கு மூளையாக, பெங்களூரை சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர், மலையாள நடிகை லீனா மரியா பால் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது.
டில்லி, பதேபூர் பூரியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும், கடந்த, 28ம் தேதி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்ய முயன்றபோது, சுகாஷ் சந்திரசேகர் தப்பி ஓடிவிட்டார். நடிகை லீனா மரியா பால், போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். பண்ணை வீட்டில் இருந்த விலை உயர்ந்த, ஒன்பது கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடிகை லீனா மற்றும் சுகாஷின் பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் நின்றிருந்த, நான்கு பேரை, சென்னை போலீசார் கைது செய்து, டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து லீனாவை, டில்லிகோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 29ம் தேதி மாலை, லீனாவுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை புறப்பட்டனர். நேற்று காலை, சென்னை வந்தடைந்த போலீசார், தாம்பரம், பூந்தமல்லி கோர்ட்டுகளில், லீனாவை ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
சுகாஷூடன் தொடர்பு: மலையாள படத்தில், லீனா நடித்து கொண்டிருந்தபோது, பெங்களூருவை சேர்ந்த சுகாஷ், தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என, மொபைல் போனில் அறிமுகப்படுத்தி கொண்டு, லீனாவுடன் அடிக்கடி பேசியுள்ளார். தான் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் ஹீரோயினாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பெங்களூருவில், பிரபல சினிமா இயக்குனர்கள் கலந்து கொண்ட, இரவு விருந்துக்கும் அழைத்து சென்று, சிலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து, சென்னை வந்து தங்கிய அவர், உடன் லீனாவையும் அழைத்து வந்துள்ளார். அப்போது லீனாவிடம், "உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.பின் சென்னையில், பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரையும் அறிமுகப்படுத்தி உள்ளார். பிரபல இந்தி சினிமா இயக்குனர் ஒருவர், உடல் நலம் சரியில்லாமல், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, லீனாவுடன் சென்று அவரை சந்தித்துள்ளார்.
இதையடுத்து, சுகாஷை உண்மையிலேயே தயாரிப்பாளர் என, லீனா நம்பிவிட்டார். சென்னையில் தங்கியிருந்த நேரத்தில், சுகாஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது, லீனாவுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சுகாஷிடம், லீனாகேட்டுள்ளார். அப்போது, "பந்தா காட்டினால் நம்மை எல்லோரும் மதிப்பார்கள் என, சுகாஷ் கூறியுள்ளார். சுகாஷின் சுயரூபம் தெரிந்த பின், அவரை விட்டு விலகிய லீனா, கேரளா சென்றுவிட்டார்.சில மாதங்கள் கழித்து, மொபைல் போனில் லீனாவை தொடர்பு கொண்ட சுகாஷ், திருந்திவிட்டதாக நாடகமாடி, மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.மேலும், லீனாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொண்டு, தன் மோசடித்தனத்துக்கு உடந்தையாக, செயல்பட வைத்துள்ளார். மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் தான், டில்லியில், 4 லட்சம் ரூபாய்வாடகையில், பண்ணை வீடு, ஆடம்பர கார்கள் என, இருவரும் சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
ரூ.62.47 லட்சம் மோசடி: கடந்த ஏப்ரல், 2012ம் ஆண்டு, சென்னை சேலையூரைச் சேர்ந்த, தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வந்த சக்கரவர்த்தி என்பவரை, லீனா தொடர்பு கொண்டு, தன்னை, கர்நாடக திட்ட வளர்ச்சி நிறுவன அதிகாரி ஜெயக்குமாரின் தனி அலுவலர் என, அறிமுகப்படுத்தி கொண்டார். பின், மொபைல் போனை வேறு ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
அவர், கர்நாடக மாநில மருத்துவ மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சீருடை தைக்க சக்கரவர்த்தியின், ஜவுளி உற்பத்தி நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். பதிவு கட்டணமாக, 62.47 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்த வைத்துள்ளார்.
பின் சக்கரவர்த்தி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சென்னைபோலீசில் புகார் அளித்தார். தன்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக அறிமுகப்படுத்தி கொண்ட சுகாஷ், தன் மனைவி லீனா, தாய் மாலா, தந்தை சந்திரசேகருடன் சேர்ந்து, கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது, லீனா மட்டுமே சிக்கியுள்ளார். "மற்றவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
லீனா கர்ப்பமா? மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை லீனா, கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, அதுபோல் எதுவும் இல்லை என, தெரிவித்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்த லீனா, சுகாஷின் வற்புறுத்தலின் பேரில், கருவை கலைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.