இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
2024ம் ஆண்டின் முதல் பெரிய வெற்றி பொங்கலுக்கு வரும் என வருட ஆரம்பித்தில் சினிமா ரசிகர்களும், திரையுலகத்தினரும் நினைத்தார்கள். ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியான தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' ஆகிய படங்கள் பிரமாதமான வெற்றியைத் தரவில்லை. அம்மாதத்தில் வெளியான மற்ற படங்களும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைத் தரவில்லை.
வருடத்தின் முதல் மாதமே ஏமாற்றினாலும் அடுத்த மாதமான பிப்ரவரி மாதம் பிரமாதப்படுத்திவிடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அதிலும் பிரமாதம் என்று சொல்லமுடியாதபடி பிசுபிசுத்துப் போனது. சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்தாலும் குறிப்பிடத்தக்க வசூலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'லால் சலாம்' படம் எதிர்பார்த்ததை விடவும் மோசனமான வசூலையே தந்து ஏமாற்றிவிட்டது. சில சிறிய பட்ஜெட் படங்களும் வசூல் ரீதியாக சுமாரான வசூலையே கொடுத்துள்ளது.
சந்தானம் நடித்த 'வடக்குபட்டி ராமசாமி', மணிகண்டன் நடித்த 'லவ்வர்' ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடின.
பிப்ரவரி மாதம் 2ம் தேதி “சிக்லெட்ஸ், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குபட்டி ராமசாமி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'வடக்குபட்டி ராமசாமி' படத்திற்கு சுமாரான விமர்சனங்கள் கிடைத்து சுமாராகவும் வசூலைக் கொடுத்துள்ளது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமான 'டெவில்' படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பிப்ரவரி 9ம் தேதி “ஈ மெயில், இப்படிக்கு காதல், லால் சலாம், லவ்வர்” ஆகிய படங்கள் வந்தன. பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு, ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றம், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் என இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்பு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சொல்ல வந்த கதையில் அழுத்தமில்லாத காரணத்தால் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ரஜினிகாந்த்தே என்றாலும் படம் நன்றாக இருந்தால்தான் தியேட்டர்கள் பக்கம் வருவோம் என ரசிகர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். 'லவ்வர்' படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பான விமர்சனங்கள் வந்தன. மணிகண்டன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'குட்நைட்' படம் அளவிற்கு இந்தப் படம் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
பிப்ரவரி 16ம் தேதி “ஆந்தை, எப்போதும் ராஜா, எட்டும் வரை எட்டு, கழுமரம், சைரன்,” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'சைரன்' படத்திற்கு மட்டுமே ஓரளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு சுமாரான விமர்சனங்கள் கிடைத்தாலும் ரசிகர்களிடம் இந்தப் படம் எடுபடாமல் போனது. ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்த முகங்கள் இருந்தும், சென்டிமென்ட்டான கதை இருந்தும் இந்தப் படம் வசூலில் ஏமாற்றம் தந்தது திரையுலகினருக்கும் அதிர்ச்சிதான். மற்ற படங்கள் எத்தனை காட்சிகள் ஓடியது என்ற தகவல்களும் அதிர்ச்சித் தகவல்கள்தான்.
பிப்ரவரி 23ம் தேதி “பைரி, பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம், வித்தைக்காரன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் வைபவ் நடித்த 'ரணம்' படம் ரசிகர்களைக் கொஞ்சம் கவர்ந்தது. விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருந்தது. ஆனால், தியேட்டர்களில் அதன் ஓட்டம் குறைவுதான். சதீஷ் நாயகனாக நடித்த 'வித்தைக்காரன்' அவருடைய முந்தைய படமான 'கான்ஜுரிங் கண்ணப்பன்' படத்துடன் ஒப்பிடும் போது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 'பைரி' படம் அதன் கதாபாத்திரங்களுக்காகவும், படத்தின் உருவாகத்திற்காகவும் பேசப்பட்ட படமாக அமைந்தது. இந்தப் படத்தை ரசிகர்களிடம் இன்னும் கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும்.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது கூடுதலாக சில திரைப்படங்கள் வெளிவந்தன. ஜனவரியிலாவது 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய இரண்டு படங்கள் சேர்ந்து 150 கோடியை வசூலித்தது என்றார்கள். பிப்ரவரி மாதத்தில் வந்த மொத்த படங்களையும் கணக்கிடும் போது அதில் பாதியாவது வசூலித்திருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.
மார்ச், ஏப்ரல் மாதங்கள் தேர்வு மாதங்கள், ஐபிஎல் மாதங்களாகப் போகப் போகிறது. பார்லிமென்ட் தேர்தல் வேறு வர உள்ளது. அதன் பிறகே தமிழ் சினிமாவின் தள்ளாட்டம் முடிவுக்கு வர வேண்டும்.
பிப்ரவரி மாதம் வெளியான படங்கள்
பிப்ரவரி 2 : சிக்லெட்ஸ், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குபட்டி ராமசாமி
பிப்ரவரி 9 : ஈ மெயில், இப்படிக்கு காதல், லால் சலாம், லவ்வர்
பிப்ரவரி 16 : ஆந்தை, எப்போதும் ராஜா, எட்டும் வரை எட்டு, கழுமரம், சைரன்
பிப்ரவரி 23 : பர்த்மார்க், பைரி, கிளாஸ்மேட்ஸ், நினைவெல்லாம் நீயடா, ஆபரேஷன் லைலா, பாம்பாட்டம், ரணம் அறம் தவறேல், வித்தைக்காரன்