'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் | காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி | நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார் | சினிமா தெரியாத கிராம மக்கள் உருவாக்கிய படம் 'பயாஸ்கோப்' | 'மிஸ்டர் பாரத்' ரஜினி பட கதையல்ல : இயக்குனர் விளக்கம் | அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல் | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் | பிளாஷ்பேக் : பவுத்த மத பின்னணியில் உருவான 'அசோக்குமார்' | 'தி ஸ்மைல் மேன்' மூலம் திரும்பி வந்த சிஜா ரோஸ் |
2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை இந்த வாரத்துடன் 200ஐ நெருங்க வாய்ப்புள்ளது. ஓடிடி தளங்களில் 27 படங்கள் வரை வெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.
இந்த 200 படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் தயாரிக்கப்பட்டது, எதற்காக வெளியானது என்பது அந்தப் படங்களை எடுத்தவர்களுக்கே தெரியும். அதில் சில படங்களின் டிரைலர்கள் கூட யூ டியூபில் கிடையாது. சில படங்களைப் பற்றி கூகுளில் தேடினால் கூட கிடைக்காது. சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் இது போல நிறைய படங்கள் வெளிவருகிறது. அவை ஒரு நாள் கூட தியேட்டர்களில் தாக்குப் பிடிக்காமல் ஓடி விடுகின்றன என்பதுதான் உண்மை.
இந்த வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்துள்ளன. 100 வருட கால தமிழ் சினிமாவில் இந்த 2022ம் ஆண்டில் தான் மொத்த வசூல் 1700 கோடியைத் தாண்டி இருக்கிறது. அதில், 'பொன்னியின் செல்வன், விக்ரம்' இரண்டு படங்கள் மட்டுமே 900 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களுடன், இந்த ஆண்டில் வசூல் ரீதியாக முதல் 10 இடங்களைப் பிடித்த படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. பொன்னியின்செல்வன்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏஆர் ரகுமான்
நடிப்பு - விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி
வெளியான தேதி - 30 செப்டம்பர் 2022
கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்'ஐ பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று முடியாமல் போய் கைவிட்டார்கள். ஆனால், அதை இரண்டு பாகங்களாக எடுத்து முதல் பாகத்தை வெளியிட்டு சாதனை படைத்துவிட்டார் இயக்குனர் மணிரத்னம். படம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் தங்களது அபிமான நாவலைத் திரைப்படமாகப் பார்க்க நாவல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தார்கள். அதன் காரணமாக இந்தப் படம் உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்து பெரிய வெற்றியைப் பெற்றது. மற்ற மொழிகளில் இந்தப் படம் அதிக அளவில் வசூலிக்கவில்லையே என்ற கவலை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்டு. அடுத்த வருடம் வெளியாகும் இரண்டாம் பாகத்தில் அது நடக்கும் என்றும் காத்திருக்கிறார்கள்.
இப்படம் தமிழக அளவில் சுமார் 190 கோடி மொத்த வசூலைப் பெற்று பங்குத் (ஷேர்) தொகையாக 100 கோடியைத் தந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இரண்டு பாங்களின் ஓடிடி உரிமை 100 கோடிக்கும், சாட்டிலைட் டிவி உரிமை 50 கோடிக்கும் விற்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
2. விக்ரம்
தயாரிப்பு - ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்
வெளியான தேதி - 3 ஜுன் 2022
காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதில் கமல்ஹாசனுக்கு நிகர் யாருமில்லை என்று கோலிவுட்டில் சொல்வார்கள். இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் கமல்ஹாசன் இணைகிறார் என்ற செய்தி வந்த போதே திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்த ஆச்சரியம் படம் வெளிவந்ததும் பேராச்சரியமாக மாறியது. கமல்ஹாசன் நடிக்க இப்படி ஒரு ஆக்ஷன் படமாக என ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் வியந்து பார்த்தார்கள். தனது 60 வருட கால திரையுலகப் பயணத்தில் கமல்ஹாசன் இப்படி ஒரு வசூலை முதல் முறையாகப் பார்த்து மகிழ்ந்தார். இந்தப் படத்தின் வெற்றி அவரது தயாரிப்பில் இன்னும் பல படங்களைப் பெற்றுத் தர உள்ளது.
உலக அளவில் சுமார் 400 கோடி வசூலைக் கடந்த, இப்படத்தின் தமிழக மொத்த வசூல் 182 கோடியைப் பெற்று, பங்குத் தொகையாக 92 கோடி ரூபாயைத் தந்துள்ளதாகத் தகவல். இப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமை சுமார் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பது டிஜிட்டல் வட்டாரத் தகவல்.
3. பீஸ்ட்
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
இயக்கம் - நெல்சன்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், பூஜா ஹெக்டே
வெளியான தேதி - 13 ஏப்ரல் 2022
நெல்சன் திலீப்குமார், விஜய் புதிய கூட்டணி என்றதும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பட வெளியீட்டிற்கு முன்பாக வெளியான 'அரபிக்குத்து' பாடலும் சூப்பர் ஹிட்டானதால் அதுவே படத்திற்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. ஆனால், எதிர்பார்த்த 'மாஸ்' படத்தில் இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரே ஷாப்பிங் மாலுக்குள் முழு கதையும் நகர்ந்ததும் ரசிகர்களை போரடிக்க வைத்தது. இருப்பினும் விஜய் படங்களுக்கென இருக்கும் ரசிகர்கள் படத்தைப் பார்த்ததால் தமிழகத்திலும் 100 கோடி வசூலைக் கடந்தது.
உலக அளவில் 220 கோடி வசூலித்ததாகச் சொல்லப்படும் இப்படத்தின் தமிழக வசூல் 115 கோடி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம். அதில் பங்குத் தொகையாக 61 கோடி வரை கிடைத்துள்ளது. இப்படத்தைத் தயாரித்த நிறுவனமே ஓடிடி, சாட்டிலைட் உரிமையை அவர்கள் வசம் வைத்துக் கொண்டதால் அதற்கான உரிமை விலை வெளியாகவில்லை.
4. வலிமை
தயாரிப்பு - பேவியூ புராஜக்ட்ஸ், ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர்
இயக்கம் - வினோத்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா
வெளியான தேதி - 24 பிப்ரவரி 2022
'நேர்கொண்ட பார்வை' படத்தில் முதல் முறையாக இணைந்த அஜித், இயக்குனர் வினோத் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது படம் 'வலிமை'. புதிதாக ஒரு ஆக்ஷன் கதையைக் கொடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் போதைப் பொருள் கடத்தல், போலீஸ் கதை என கொஞ்சம் பொறுமையை சோதித்த படமாக அமைந்தது. 'விஸ்வாசம்' படத்திற்குப் பிறகு அதை முறியடிக்கும் ஒரு வெற்றி அஜித்திற்கு இந்தப் படம் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து பொய்யாகிப் போனது. வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'துணிவு' படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி அப்படத்திலாவது வசூல் சாதனை படைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
உலக அளவில் 200 கோடியைக் கடந்ததாகச் சொல்லப்படும் இப்படத்தின் தமிழக வசூல் 94 கோடியாகவும், பங்குத் தொகை 52 கோடியாகவும் இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே ஓடிடி, சாட்டிலைட் டிவிக்களை நடத்துவதால் அவர்களே உரிமையை வைத்துக் கொண்டார்கள்.
5. டான்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சிபி சக்கரவர்த்தி
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன்
வெளியான தேதி - 13 மே 2022
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலைக் கடந்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் எதற்காக ஓடியது, ஏன் ஓடியது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவ்வளவு சிறப்பான கதையுமல்ல, விறுவிறுப்பான திரைக்கதையுமல்ல, ஆனால் படம் ஓடிவிட்டது. அனிருத் இசையில் அமைந்த பாடல்களும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியோ விஜய், அஜித்திற்குப் பிறகு இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த ஒரு படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் முன்னேறிவிட்டார்.
உலக அளவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்த வசூல் 78 கோடியாகவும், பங்குத் தொகை 38 கோடியாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை மட்டும் சுமார் 30 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்.
6. திருச்சிற்றம்பலம்
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
இயக்கம் - மித்ரன் ஆர் ஜவஹர்
இசை - அனிருத்
நடிப்பு - தனுஷ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 18 ஆகஸ்ட் 2022
பெரிய அளவில் விளம்பரம், ஒரு பரபரப்பு என வெளியீட்டிற்கு முன்பு எதையும் ஏற்படுத்தாமல் படம் வெளிவந்த பின்பு அதன் வரவேற்பே இந்தப் படத்திற்கு விளம்பரமாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. இப்படி ஒரு காதல் பிளஸ் குடும்பப் படமா என ரசிகர்கள் வியந்து பார்த்து ரசித்தார்கள். தனுஷ், நித்யா மேனன் இடையிலான நட்பு இன்றைய இளைஞர்களை ஏங்க வைத்த ஒன்றாக அமைந்தது. “யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்' படங்களுக்குப் பிறகு தனுஷ், இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணி மீண்டும் ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது.
உலக அளவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல். தமிழகத்தில் 75 கோடி மொத்த வசூலையும், பங்குத் தொகையாக 29 கோடியையும் கொடுத்துள்ளது என்கிறார்கள். படத்தைத் தயாரித்த நிறுவனமே ஓடிடி, சாட்டிலைட் உரிமையை அவர்கள் வசம் வைத்துக் கொண்டது.
7. சர்தார்
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - பிஎஸ் மித்ரன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா
வெளியான தேதி - 21 அக்டோபர் 2022
மித்ரன், கார்த்தி கூட்டணியின் முதல் படம். படத்தின் டிரைலர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடி படமும் ஒரு மாறுபட்ட ஆக்ஷன் படமாக அமைந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. கார்த்தியின் வசூல் படங்களில் இந்தப் படம் புதிய மைல்கல்லைத் தொட்டது. அதனால், கார்த்தியின் வியாபார எல்லையும், வியாபாரமும் விரிவடைந்துள்ளது. இந்த வருடத்தில் கார்த்தி நடித்து கடைசியாக வெளிவந்த மூன்றாவது படம் இது. இதற்கு முன்பாக வெளியான 'விருமன், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களும் கார்த்திக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
உலக அளவில் 'சர்தார்' படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. தமிழக அளவில் 52 கோடி மொத்த வசூலையும், அதில் பங்குத் தொகையாக 24 கோடியையும் பெற்றது. இப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவை 30 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
8. லவ் டுடே
தயாரிப்பு - எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பிரதீப் ரங்கநாதன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா, ரவீணா
வெளியான தேதி - 4 நவம்பர் 2022
ஒரு அறிமுக நடிகரின் படம் தமிழ் சினிமாவில் 70 கோடி வசூலைக் கடப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு சாதனையைத் தனது முதல் அறிமுகப்படத்திலேயே பெற்ற கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன். 'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தனது இரண்டாம் படத்திலேயே நாயகனாக அறிமுகமாகினார். இளம் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத பெரியதொரு வெற்றியைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் ஆகி அங்கும் லாபகரமான படமாக அமைந்தது.
தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்தின் மொத்த வசூல் 55 கோடி என்றும், பங்குத் தொகை 25 கோடி என்றும் தெரிவிக்கிறார்கள். இப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை சுமார் 9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல். படத்தின் மொத்த பட்ஜெட்டை இந்த 9 கோடிதான் என்கிறார்கள். தியேட்டர் வசூல் அனைத்துமே கூடுதல் லாபம்தான்.
9. விருமன்
தயாரிப்பு - 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - முத்தையா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி
வெளியான தேதி - 12 ஆகஸ்ட் 2022
'கொம்பன்' படத்திற்குப் பிறகு கார்த்தி, இயக்குனர் முத்தையா கூட்டணி இணைந்த படம். மீண்டும் ஒரு கிராமத்துக் கதை. அப்பாவை எதிர்த்து நிற்கும் ஒரு மகனின் கதை. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 'கொம்பன்' அளவிற்கு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.
தமிழக வசூலாக 50 கோடியைக் கடந்த இந்தப் படம் 23 கோடிக்கு பங்குத் தொகையைக் கொடுத்தது. ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை சுமார் 35 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10. காத்துவாக்குல ரெண்டு காதல்
தயாரிப்பு - ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விக்னேஷ் சிவன்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா
வெளியான தேதி - 28 ஏப்ரல் 2022
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்ற படம். விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி கூட்டணி இணைந்த 'நானும் ரவுடிதான்' படம் பெரிய வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. அந்த அளவிற்கு இல்லையென்றாலும் இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்தது. இன்னும் கூட சுவாரசியமான படமாக இப்படத்தைக் கொடுத்திருக்கலாம்.
இப்படம் தமிழக வசூலாக 33 கோடியையும், அதில் பங்குத் தொகையாக 19 கோடியையும் தந்தது. ஓடிடி, சாட்டிலைட் உரிமையாக 20 கோடிக்கு விற்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.
டப்பிங்கிலும் வசூல் மழை
இந்த டாப் 10 பட்டியலில் நேரடித் தமிழ்ப் படங்களை மட்டுமே கணக்கில் எடுத்திருக்கிறோம். டப்பிங் படங்களான 'கேஜிஎப் 2' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களும் தமிழில் நல்ல வசூலைப் பெற்றுள்ளன. 'கேஜிஎப் 2' படம் 120 கோடி வசூலைப் பெற்று அதில் பங்குத் தொகையாக 48 கோடியையும், 'ஆர்ஆர்ஆர்' படம் 85 கோடி வசூலைப் பெற்று அதில் பங்குத் தொகையாக 32 கோடியையும் தந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் உலகளவில் 1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டுள்ள படங்களின் மூலம் மட்டுமே 1500 கோடி அளவிலான வசூல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இன்னும் சில படங்களை சேர்த்தால் 1700 கோடிக்கும் அதிகமான வசூல் வந்திருக்கும். அவ்வளவு வசூல் வந்தாலும் ஐந்தாறு படங்கள் மட்டுமே அதிக லாபத்தைக் கொடுத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். வெளியாகும் 200 படங்களில் குறைந்தது பாதி படங்களாவது லாபகரமான படமாக அமைந்தால் தான் வரும் காலங்கள் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.
குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றுள்ள வசூல் விவரங்கள், ஓடிடி, சாட்டிலைட் விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அவை அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் அல்ல.