அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் தடம் பதித்துச் சென்ற ருத்ரய்யா இப்போது நம்முடன் இல்லை. அந்த மாபெரும் படைப்பாளியை காலம் கரைத்துச் சென்று விட்டது. ஆனால் அவர் படைத்த ஒரு படைப்பு அவள் அப்படித்தான். அது தமிழ் சினிமா இருக்கிற வரைக்கும் நிலைத்து நிற்கும். ருத்ரய்யா 100 படங்கள் இயக்கிய இயக்குனருமல்ல. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தவரும் அல்ல. பி.எம்.டபிள்யூ காரில் பவனி வந்தவரும் அல்ல. ஜீன்ஸ் பேண்ட் பாக்கட்டில் கைவிட்டு கெத்து காட்டியவரும் அல்ல. தொலைக்காட்சி ஷோபாக்களில் அமர்ந்து எதிர்கால சினிமா பற்றி பேசியவரும் இல்லை. படைப்பாளி, நிஜமான படைப்பாளி எடுத்தது இரண்டு படம்தான் இரண்டும் தோல்விதான் ஆனாலும் இந்த படைப்பாளி காலத்தை வென்று, காலத்தை கடந்து நிற்கிறான்.
அவள் அப்படித்தான்
ருத்ரய்யா ஏன் தொடர்ந்து படங்கள் எடுக்கவில்லை. சொந்த வாழ்க்கையில் தோற்று, விவசாய கூலி வேலை செய்து பிழைத்து, மீண்டும் சினிமா எடுக்க வந்து அவமானப்பட்டு இறுதி காலத்தில் யாருமற்று செத்துப்போன ருத்ரய்யாவை பற்றி நாம் பேசப்போவதில்லை. அந்த படைப்பாளி தமிழ் சினிமாவிற்கு கொடையாக கொடுத்துச் சென்ற அவள் அப்படித்தான் என்ற அபூர்வ படைப்பை தினமலர் பதிவு செய்ய விரும்புகிறது.
தமிழ் சினிமாவில் டாப் 10 படங்கள் என்ற பட்டியலில் அவள் அப்படித்தான் இடம் பிடித்திருக்கிறது. டாப் 10 இயக்குனர்களில் ருத்ரய்யா பெயர் இருக்கிறது. அந்த ஒரு படத்தில் அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார் பார்க்கலாம்...
சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத்துக்கு மாறிய நேரம் அது. ரஜினியும், கமலும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்து தனித்தனி டிராக்கில் பயணம் செய்து கொண்டிருந்த நேரம். சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்று விளம்பரம் செய்து மசாலா படங்கள் தயாரிப்பாளரின் கஜானாக்களை நிரப்பிக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் ஒரு புயலாக, அதிரடியாக எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது அவள் அப்படித்தான்.
அடையாளம் கண்டவர்கள்
அன்றைய தேதிப்படி லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கமலும், ரஜினியும் புதிய இயக்குனரான ருத்ரய்யா இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்கள். இருவருக்குமே ஜோடி போட்டு மாதத்துக்கு இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியா நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றால் இந்த மூவரும்தான் ருத்ரய்யா என்ற படைப்பாளியை முதலில் அடையாளம் கண்டவர்கள்.
அவள் அப்படித்தான் வெளிவந்தது 1978ம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதி. திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு வந்த ருத்ரய்யாவிற்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. ஊரில் உள்ள நிலத்தை விற்று குமார் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக தயாரித்தார்.
கதை
ஸ்ரீப்ரியாதான் கதையின் மைய புள்ளி. குடும்ப பொறுப்பில்லாமல் திரியும் தந்தை. அதை பயன்படுத்தி பல ஆண்களோடு வாழும் தாய். இந்த இருவராலும் அன்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார். அன்புக்காக ஏங்கும் அவள் மீது அன்பு செலுத்துவது மாதிரி நடித்து அவரை அனுபவிக்கவே ஏங்குகிறார்கள் ஆண்கள். இதனால் உண்மையான அன்புக்கும், போலியான அன்புக்கும் வித்தியாசம் தெரியாமலே போகிறது அவளுக்கு, காதலித்த ஒருவன் குடும்ப சூழ்நிலையை காட்டி விலகுகிறான். ஒருவன் அனுபவிக்கவே காதலித்து வேலை முடிந்ததும் கிளம்புகிறான். அவள் மீது தீராக் காதலன் இருப்பதாக சொன்னவன் அவள் தன் உடலை தர மறுக்கிறாள் என்றதும் தங்கை என்று சொல்கிறான். இதனால் தன்னை உண்மையாக காதலிப்பவனின் அன்பையுமே அவள் சந்தேகம் கொள்கிறாள். அவனை புரிந்து கொள்ளமாலேயே உண்மையான அன்பை தேடி அவள் போய்கொண்டே இருக்கிறாள் இதுதான் கதை.
அவளை காதலித்து ஏமாற்றுகிறவர்களில் ஒருவராக ரஜினி நடித்திருந்தார். அவளை உண்மையாக காதலிப்பவராக கமல் நடித்திருந்தார்.
20 நாளில் முடிந்த படம்
20 நாட்களில் படப்பிடிப்பை முடித்து 2 மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்தார் ருத்ரய்யா, படத்தின் பட்ஜெட் சுமார் ஒரு லட்சம். ஆரி 2பி என்ற சிறிய கேமராவில் 27 ரீல்களில் படத்தை பதிவு செய்து அதனை 14 ரீல்களாக எடிட் செய்திருந்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் லாங் ஷாட்டிலேயே இருக்கும். குறைவான வசனங்ளைக் கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும், பெரும்பாலான காட்சிகள் கேமராவை கையில் வைத்துக் கொண்டு கேரக்டரின் பின்னாலேயே சென்று படமாக்கப்பட்டிருக்கும், சிறிய அறைக்குள் நடக்கும் காட்சியைகூட அப்படியே படமாக்கியிருப்பார். வீட்டின் ஹாலில் இருந்து படுக்கை அறைக்கு, அங்கிருந்து மீண்டும் ஹாலுக்கு, கிச்சனுக்கு மாறி மாறி கேரக்டர் சென்றாலும் அதனை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பார்.
மக்கள் தந்த தோல்வி
சினிமா வண்ணக்கோலங்கள் போட்டுக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த காலத்தில் ருத்ரய்யா போட்ட கருப்பு வெள்ளை வாழ்க்கை கோலத்தை மக்கள் ரசிக்கவில்லை. அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தபோதும் கதை தந்த அழுத்தத்தை ஜனங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. படத்தின் கதாபாத்திரங்களை போலவே ருத்ரய்யாவின் மஞ்சுவும் (ஸ்ரீப்ரியா) மக்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. அவளை திமிர் பிடித்த பெண்ணாகவே பார்த்தார்கள். ஒருவேளை அவள் அப்படித்தான் வெற்றி பெற்றிருந்தால் தமிழ் சினிமாவுக்கு காலத்தை வென்று நிற்கும் பல படைப்புகள் ருத்ரய்யா மூலம் கிடைத்திருக்கும்.
மகத்தான இந்த கலைஞன் ஏன் சினிமாவை விட்டு விலகி நின்றார். ஏன் கிராமத்து அத்தியாயம் என்ற மிகச் சாதாரண படத்தை கொடுத்தார், சொந்த வாழ்க்கையில் ஏன் தோற்றார். கடைசி காலத்தில் தனிமையை நாடியது ஏன்? இப்படி எழும் எல்லா கேள்விக்கும் நமக்கு தெரிந்த ஒரே பதில் அவர் அப்படித்தான்.