ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் |
நடிகர் திலகம் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனின் புகழ் கிரீடத்தின் உச்சியில் மாணிக்க கல்லாக இன்றும் மின்னிக் கொண்டிருப்பது திருவிளையாடல். 1965ம் ஆண்டு ஜூலை 31ந் தேதி இந்த புராண காவியம் வெளிவந்தது. ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.பி.நாகராஜன் அன்றைக்கே பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்த படம். இயக்குனரும் அவரே. இன்றைக்கு அந்தப் படத்தை அதே தரத்துடன் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 100 கோடி ரூபாய் வேண்டும். ஒரு இயக்குனர் தன்னை நம்பி அத்தனை பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்திருப்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்.
மனிதர்கள் தெய்வங்களாக...
திருவிளையாடலுக்கு முன்பும் புராண படங்கள் நிறைய வந்திருக்கிறது. திருவிளையாடலில் என்ன புதுமை என்றால் கடவுளை மனித உருவில் நடமாடவிட்ட படம். கதையின் நாயகனான பரமசிவன் மனித உருவில் வந்து பல திருவிளையாடல்களை நடத்திய கதை. பரமசிவன் என்ற கடவுளை தமிழ் மக்கள் புராணங்களிலும், பக்தி பாடல்களிலும் படித்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று கற்பனை செய்து வைத்திருந்தார்கள். அந்த கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார் சிவாஜி. பரமசிவன் எப்படி நடப்பார், சிரிப்பார், கோபப்படுவார், என்பதெல்லாம் திருவிளையாடலுக்கு பிறகே மக்களுக்கு முழுமையாக தெரியவந்தது. பல திரைப்படங்களில் பல நடிகர்கள் சிவன் வேடமிட்டாலும் இன்று வரை சிவாஜியின் நிழலுக்கு நிகராககூட எவரும் நடித்து விடவில்லை.
இதேபோலத்தான் உமையாளகவே, பார்வதி தேவியாகவே சாவித்திரி வாழ்ந்திருந்தார். அன்றைக்கு இருந்த, இன்றைக்கும் இருக்கிற கணவன் மனைவிகளின் ஈகோ சண்டையை பரமசிவன், பார்வதி சண்டையாக உருவகப்படுத்தி கொடுத்து இறைவனையும் மனிதனுக்கு பக்கத்தில் வைத்தால்தான் படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. படத்தில் ஏராளமான கேரக்டர்கள் இருந்தாலும் அந்த கேரக்டர்கள் அவற்றுக்குண்டான நியாங்களோடு இருந்தது. ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு மனிதனின் குணத்தை சித்தரிப்பதாக இருந்தது.
சமூக பிரச்சினைகள் பேசிய படம்
புராண படங்களில் பாதி வசனங்கள் மக்களுக்கு புரியாமல் இருந்த காலத்தில் தூய தமிழில் வசனத்தை எழுதி மக்களுக்கு கடவுளின் வாழ்க்கையை புரிய வைத்த படம். பார்வதிக்கும் பரமசிவனுக்குமான கருத்து மோதலில் "கடைசி குடிமகனில் இருந்து உலகை காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாக பிறப்பது பெரும் தவறென்று புரிந்து விட்டது" என்று சாவித்ரி பேசிய வசனம் புராணப்படத்திலும் பெண்களின் நிலை பேசப்பட்டது. நக்கீரனுக்கும், சிவனுக்குமான விவாதத்தில் "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற பொது நீதி சொல்லப்பட்டது. செருக்குண்டு திரிந்து, பாட்டுக்கு நாட்டையே கேட்ட ஹேமநாத பாகவதரை (டி.எஸ்.பாலையா) விறகு வெட்டியின் பாட்டுக்கு அடிமையாக்கி அனுப்பி வைத்த திரைக்கதை அபாரம் இதுவரை மற்ற புராண படங்களில் சாத்தியப்படாதது.
திரைக்கதை சாதனை
ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு சென்ற முருகனை சமாதானப்படுத்த சென்ற அவ்வை, அப்பன் சிவனின் திருவிளையாடல்களை சொல்லி முருகனின் கோபத்தை தணிக்கும் விதமான திரைக்கதை திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைக்கத் தக்க தகுதியுடையது. கண்களுக்கு குளிர்ச்சியான, வண்ணமயமான ஒளிப்பதிவை இப்போது பார்த்தாலும் ஆச்சர்யப்பட வைக்கும். கே.வி.பிரசாத்தின் கேமரா கைவண்ணம் காலத்தை கடந்தும் நிற்கிறது. கே.வி.மகாதேவன் ஒரு இசை தேவனாகவே இந்தப் படத்தில் தனது ராஜாங்கத்தை நிகழ்த்தியிருப்பார்.
இசை ராஜாங்கம்
பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா... (கே.வி.சுந்தராம்பாள்), இன்னொரு நாள் போதுமா... (எம்.பாலமுரளி கிருஷ்ணா), இசை தமிழ் நீ செய்த அருஞ் சாதனை (டி.ஆர்.மகாலிங்கம்), பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டா நெடுமரம்... (டி.எம்.சவுந்தர்ராஜன்), பாட்டும் நானே பாவமும் நானே.. (டி.எம்.சவுந்தர்ராஜன்), பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்... (எஸ்.ஜானகி, பி.பி.ஸ்ரீனிவாஸ்), ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..-. (கே.பி.சுந்தராம்பாள்), இல்லாததொன்றில்லை... (டி.ஆர்.மகாலிங்கம்) ஆகிய பாடல்கள் காற்று உள்ள வரை காலமெல்லாம் நிறைந்திருக்கும்.
தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த இந்த மகா காவியத்தை சின்னத்திரையில் பார்க்க நேர்தால் உங்கள் ரிமோட்டை விலக்கி வைத்து விட்டு அனுபவித்து பாருங்கள் இனம் புரியாத ஆனந்தம் உங்களை ஆட்கொள்ளும். காரணம் தெய்வம் மனித அவதாரம் எடுக்கும் இந்த யுகத்தில் சிவாஜி என்னும் மனிதன் தெய்வ அவதாரம் எடுத்த அதிசயம் திருவிளையாடல்.