ராஜபீமா
விமர்சனம்
தயாரிப்பு - சுரபி பிலிம்ஸ்
இயக்கம் - நரேஷ் சம்பத்
நடிப்பு - ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த், யோகிபாபு
வெளியான தேதி - 31 ஜனவரி 2025
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமாவில் மிருகங்களை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்து நீண்ட இடைவெளியாகிவிட்டது. ஒரு காலத்தில் யானையை மையப்படுத்திய படங்கள் அடிக்கடி வரும். கட்டுப்பாடுகள் அதிகமாகிவிட்டதால் இப்போது அம்மாதிரியான படங்கள் அபூர்வமாகிவிட்டது. இந்த 'ராஜபீமா' படம் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் இப்போது கிடைத்துள்ள இடைவெளியில் வெளிவந்துள்ளது.
அம்மாவின் திடீர் மரணத்தால் சிறு வயதிலேயே அமைதியாக இருக்க ஆரம்பித்தவர் ஆரவ். அம்மா சொன்ன கதைகளால் யானை மீது பற்று கொண்டவர். ஒரு யானையைப் பார்த்ததும் பழையபடி கலகலப்பாக மாறுகிறார். அதனால், ஆரவ்வின் அப்பா நாசர் அந்த யானையை வீட்டிற்குக் கொண்டு வந்து வளர்க்கிறார். யானையும், ஆரவ்வும் அண்ணன், தம்பி போல பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த யானை திடீரென காணாமல் போகிறது. யானையைத் தேடி அலைகிறார் ஆரவ். அந்த யானையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆரவ்வுக்கும், யானைக்குமான பாசம்தான் படத்தின் மையக் கதை. இருந்தாலும் ஆக்ஷன் கதையாக மாற்றுவதற்காக அரசியல், கடத்தல் என சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அழுத்தமான காட்சிகள், பெரிய திருப்புமுனைகள் இல்லாமல் எளிமையான திரைக்கதையுடன் படம் நகர்ந்து முடிகிறது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வந்ததும் ஆரவ்வுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் தேடி வந்தன. அவற்றில் ஒப்பந்தமான ஒரு படம். ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளது. ஆறடி உயரம் இருப்பவர் என்பதால் அவர் அடிக்கும் அடிகளும் நம்பும்படியாகவே உள்ளது. ஆக்ஷன் ஹீரோ பாதையில் சரியாக வளர்ந்திருக்க வேண்டிய ஆரவ், எங்கோ மிஸ் செய்துவிட்டார் என்பது மட்டும் புரிகிறது.
ஆரவ்வின் காதலியாக ஆஷிமா நர்வால். ஓரிரு காட்சிகளில் வந்து போவதுடன் அவருடைய வேலை முடிகிறது. அது போலவே யாஷிகா ஆனந்த். பிக் பாஸில் ஆரவ்வின் ஆஸ்தான தோழியாக இருந்த ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
படத்தின் முக்கிய வில்லன் கேஎஸ் ரவிக்குமார். வனத்துறை அமைச்சராக இருப்பவர். ஜோசியர் சொல்படி மட்டுமே நடப்பவர். அதனால், பிச்சை எடுக்கும் யோகிபாபுவைக் கூட தத்தெடுத்து மகனாக வளர்க்கிறார். யோகிபாபு காமெடி என்று ஏதோ செய்கிறார், ஆனால், சிரிப்புதான் வரவில்லை. ரவிக்குமாரின் அடியாளாக பாகுபலி பிரபாகர், முதல்வராக சாயஷி ஷின்டே ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
சைமன் கே கிங் இசையில் பாடல்கள் மிகச் சுமார். எஸ்ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவில் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகிறார்.
படம் எடுத்து முடித்த காலத்தில் வந்திருந்தால் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றிருக்க வாய்ப்புண்டு. இப்போது ஆக்ஷன் கதைகளுக்கான டிரென்ட் மாறிவிட்டது.
ராஜபீமா - பெயர் மட்டும் போதாது…
பட குழுவினர்
ராஜபீமா
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்