அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.விஜய்ஷங்கர் இயக்கும் புதிய காதல் படம் உயிர் நனைகிறதே. பட்டாளத்தார் பிலிம்ஸ் சார்பில் ராஜாமுகமது தயாரிக்கும் இப்படத்தில் பிறப்பு, ஒளியும் ஒலியும் படங்களில் நடித்த பிரபா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தேஜஸ்ரீ நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய கேரக்டரில் அறிமுக நடிகர் சூர்யகாந்த் நடிக்கிறார். இவர் மும்பையிலுள்ள அனுபம்கேர் நடிப்பு கல்லூரியில் பயின்றுள்ள அனுபவத்துடன் இந்தி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். படத்தில் நாயகனின் தாயாக கவுதமி, நாயகியின் தாயாக தேவகி, காமெடியில் கலக்கவுள்ள கஞ்சாகருப்பு இவர்களுடன் லிவிங்ஸ்டன், நிழல்கள்ரவி, காதல்தண்டபாணி,பொன்னம்பலம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
காதலிக்கும்போது ஒவ்வொரு நொடியிலும் சந்தோஷத்தை சுவைக்கும் காதலர்கள், காதல் தோல்வியை சந்திக்கும்போது சாவை துணைக்கு அழைப்பது, காலகாலமாகவே காதலர்களின் முடிவாக இருக்கிறது. இம்மாதிரியான காதலர்களின் மனசை சலவை செய்யும் கதைதான் இது, என்கிறார் இயக்குனர் விஜய்ஷங்கர்.
கும்பகோணம், மயிலாடுதுறையை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் விருத்தாச்சலம், கடலூர், பாண்டிச்சேரியை சுற்றிய பகுதிகளில் நடத்தப்படுகிறது. இரண்டு பாடல் காட்சிகள் ஊட்டி மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறதாம். சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம், சுனாமியால் பாதிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.திட்டு என்றழைக்கப்படும் தீவு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ஒரு பாடலை படமாக்கவுள்ளனர்.
கே.வி.குகன்,ப்ரியன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த எழில் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த்தேவா இசையமைப்பில் நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்களை எழுதுகின்றனர்.