விமர்சனம்
அர்ஷாத் வர்ஷி, அமித் ஷாத் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் காமெடி படம் குட்டு ரங்கீலா. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, குட்டு எனும் அமித் ஷாத்தும், ரங்கீலா எனும் அர்ஷாத் வர்ஷியும் உறவினர்கள். இருவரும் சின்னத்தாய் ஒரு இசைக்குழு வைத்துள்ளனர். ஆனால் இந்த தொழிலில் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் போதவில்லை. இதனால் எந்த வழியிலாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஒருநாள் பெரும் கோடீஸ்வரியின் மகளான பேபி எனும் அதிதீ ராவ் ஹைதாரியை கடத்துகின்றனர். அதன்மூலம் பெரும் பணம் சம்பாதிக்க எண்ணுகின்றனர். ஆனால் பேபியை கடத்திய பிறகு தான் அவர்களுக்கு பிரச்னை இன்னும் அதிகமாகிறது. ஏன், எப்படி என்பதை காமெடியாக விவரிக்கிறது படத்தின் மீதிக்கதை! இதனூடையே கெளரவ கொலை தொடர்பாக ஒரு சமூக செய்தியையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
அமித் ஷாத், அர்ஷாத் வர்ஷி இருவரைக்காட்டிலும் ரோனித் ராயின் நடிப்பு தான் பிரமாதமாய் இருக்கிறது. அர்ஷாத் வர்ஷி இரண்டு விதமான பரிமாணங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் இந்தப்படத்தில் அவரது காமெடிகள் கொஞ்சம் குறைவு தான். அதேசமயம், அவர் தன் கேரக்டரை பொருந்தி நடித்திருக்கிறார். அர்ஷாத் காட்டிலும் அமித் ஷாத்தின் நடிப்பு பிரமாதம். அதேப்போல் அதிதியின் நடிப்பும் ஓ.கே.,
ஜாலி எல்எல்பி படங்களுக்கு பிறகு சுபாஷ் கபூர் இயக்கியிருக்கும் படம் இது. எப்பவும் சமூகம் சார்ந்த விஷயங்களை தன் படத்தில் சொல்லும் இயக்குநர் இந்தப்படத்திலும் கெளரவ கொலையை சுட்டி காட்டியிருக்கிறார். குட்டு ரங்கீலா படத்தின் இசை ஒரு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஒலித்து கொண்டிருப்பது எரிச்சலடைய செய்கிறது. ஒரு சீரியஸான கதையை இப்படி காமெடியாக சொல்லியிருக்க வேண்டாம் என எண்ண தோன்றுகிறது.
பஞ்சாயத்துகளில் நடக்கும் கெளரவ கொலையை பின்னணியாக கொண்டு சொல்லியிருக்கும் விஷயத்திற்காக குட்டு ரங்கீலா படத்தை பார்க்கலாம்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!