விமர்சனம்
--------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுதான் படத்தின் அடிநாதம். அட! உள்குத்து அரசியல் படமா? என அவசரப்படாதீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு கதாநாயகர்கள் மூன்று கதாநாயகிகளைச் சுற்றி வரும் படம் இது.
ஒளிப்பதிவு இனிய கவிதை! கோயமுத்தூர் குளத்தில் இருக்கும் ஆகாவளி ஆகாயத் தாமரையைக்கூட அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள். மார்டின் ஜோவுக்கு ஒரு ஜே! அந்தக் கால கோழி கூவுது பட நாயகி விஜியின் சாயலில் சிருஷ்டி டாங்கே ஜொலிக்கிறார். கூடுதலாகக் கன்னத்தில் விழும் குழி, கேக் மீதிருக்கும் செர்ரி மாதிரி மினுங்குகிறது. யோகி பாபுவின் அப்பாவி நடிப்பு செம காமெடி.
பழம்பெரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனை, ஆணியில் கேமராவைத் தொங்க விட்டுவிட்டு நடிகர்களை நடிக்க வைப்பார் என்று செல்லமாகக் கிண்டல் செய்வதுண்டு. இந்தப் படத்திலும் கேமிரா அசையாமல் நிற்க, அதற்குமுன் பாத்திரங்கள் வசனம் பேசிச் செல்லும் காட்சிகள் நிறைய உண்டு. பலரும் புதிய நடிகர்கள். கேமிரா கூச்சமும், செயற்கைத் தன்மையும், நாடக பாணியும் தென்படுகின்றன. கூடுதல் ஒத்திகைகள் எடுத்திருக்கலாம். அரசியல்வாதிகள் வரும் காட்சிகள் ஆறிப்போன அவல் உப்புமா!
பெண்ணை வர்ணிக்ம் காட்சியில் ஒரு பாத்திரம், புதுசா வாங்கின பிரஷ் போல இருக்கிறாள் என்று சிலாகிக்கும். தியேட்டரில் சிரிப்பொலி. காரணம் அப்படிச் சொல்பவர் ஒரு பெயின்டர்! யூஏ சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தின் ஒரு கதாநாயகியை பள்ளி மாணவியாகக் காட்டியிருக்கிறார்கள்.
வெகுநாட்களுக்குப் பிறகு பாடல்கள், ரிதத்தோடு தாளம் போட வைத்ததற்கு ஒரு சபாஷ்! குறிப்பாகக் குறும்படமே பாடல் சூப்பர். பின்னணிக் குரல்களும் சூழலும் ஒத்திசைந்து ஒலிப்பது ஜோர்!
அறை விழும் சத்தத்தோடு கோவில் மணி ஓசையை சிங்க் செய்வது போன்ற குறும்புத்தனமான காட்சிகள் அநேகம்.
கவர்மெண்ட் வேலை கிடைப்பது தான் கஷ்டம்; கிடைச்சிட்டா வேலையே செய்ய வேண்டியதில்லை என்பது போன்ற வாழைப்பழ ஊசி வசனங்கள் ஆங்காங்கே பளிச்! பளிச்! தியேட்டரில் கைதட்டல் பெறுவதற்காக அஜீத் கட் அவுட்களைக் காண்பிக்கும் இடங்கள், இயக்குநரின் தன்னம்பிக்கை மீது அவருக்கே சந்தேகமா என எண்ண வைக்கின்றன.
பெரிய இடத்துப் பெண், பொறுக்கியைக் காதலிப்பதாய் இருக்கும் வீச்சமடிக்கும் கதையைத் தவிர்த்திருக்கலாம். நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் இல்லை. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் கைகளிலும் இருக்கிறது என்ற வசனம் மிகப் பெரிய உண்மை. அதை லாவகமாகக் கையாண்டிருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
வில் அம்பு - குறி தவறவில்லை.
தியேட்டரில் படம் பார்த்து வெளிவந்த சீனிவாசன் - வசந்தி தம்பதியின் கருத்து: முன்பாதியில் ரவுடிக்குச் சாதகமாகவும், கதாநாயகனுக்கு எதிராகவுமே எல்லாம் நடப்பது போல் காட்டியிருப்பது விறுவிறுப்பு! குழந்தைகள் விரும்பும் துறையிலேயே அவர்களை ஈடுபட வாய்ப்பளிக்கப் பெற்றோர் அனுமதிக்க வேண்டும் என்ற மெசேஜ் பாராட்டப்பட வேண்டியது! மொத்தத்தில் படம் பிடிச்சிருக்கு.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!