விமர்சனம்
எகத்தாளம், தெனாவட்டு, சிறுபிள்ளைத்தனமான ஆசை என்று அறுபது வயது முதியோரை கண்முன் நிறுத்துகிறார் விஜய் சேதுபதி. தன் மகன் ஒரு ஜெர்னலிஸ்ட் என்று மிரட்டுவதும், டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகளிடம்கூட திமிராகப் பேசுவதும், நோயாளியாக இருந்துகொண்டு குத்துப்பாட்டு ஆட்டம் போடுவது என்று விஜய் சேதுபதி ஸ்கோர் செய்கிறார்.
ஆம்புலன்ஸில் முதலுதவி நிபுணராக வரும் ரமேஷ் திலக், நோயாளியிடம் படும்பாடு, அப்பா சென்டிமென்ட், தன்மானத்துடனான காதல் என்று விஜய்சேதுபதிக்கு இணையான நடிப்பைக் காட்டுகிறார். டிரைவராக வரும் ஆறுமுகம்பாலா படும் எரிச்சலே அவரின் நடிப்பை காட்டிவிடுகிறது. காதலியாக வரும் அஸ்ரிதா, விஜய் சேதுபதியின் மகனாக வரும் கருணாகரன் ஆகியோர் கச்சிதம்.
முதுமை, தனிமை, அப்பா -மகன் உறவு என்று சில விஷயங்களை அழகாகப் புரியவைக்கிறார் இயக்குநர். சொல்லிய விதத்தில்தான் சுவாரஸ்யம் குறைகிறது. ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை கொஞ்சம் வேகமாக காட்டியிருந்தால் எப்படி இருக்கும், அப்படித்தான் போகிறது படம்.
ஆரஞ்சு மிட்டாய் - கொஞ்சம் இனிப்பு, நிறைய புளிப்பு.
குமுதம் ரேட்டிங் - ஓகே
கல்கி திரைவிமர்சனம்
ஆரஞ்சு மிட்டாய்
தமிழ்த் திரைப்படங்களின் தேய்ந்துபோன பல மரபுகளைத் துணிச்சலுடன் மீறி இருக்கிறது ஆரஞ்சு மிட்டாய். புவி ஈர்ப்பு விசைக்கெதிரான சண்டைகள், கொச்சையான நடனங்கள், அபத்தமும் விரசமும் நிரம்பிய நகைச்சுவை, பஞ்ச் வசனங்கள், டாஸ்மாக் காட்சிகள் போன்ற எதுவும் இல்லை. அவ்வளவு ஏன்... இடைவேளைக்கு முன்னர் இருந்ததைவிட மீதிப்படத்தின் நீளம் குறைச்சலாக இருந்தே ஆக வேண்டும் என்ற விதியும் மீறப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வகையான சோதனை முயற்சிகளை தைரியமாகச் செய்துபார்த்திருக்கும் படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்!
பயணம் மேற்கொள்ளும்போது நடக்கும் சம்பவங்களைப் படமாக்கிய ஒரு சில படங்கள் வரிசையில் ஆ.மி. முக்கியமான படம். வயதான வேடத்தில் விஜய் சேதுபதி அற்புதமாக நடித்திருக்கிறார். சொந்த வாழ்வில் புறக்கணிக்கப்படும் சில வயோதிகர்கள், மற்றவர்களை லேசாகப் புண்படுத்தித் தங்கள் ஆற்றாமையை வெளிக்காட்டுவார்கள் என்கிற நுணுக்கமான விஷயத்தைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காலப் பெரிய நடிகர்கள் இந்தப் பாத்திரத்தில் ஏற்றிருந்தால் ஓவர் ஆக்டிங்கில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்கள். ஆனால் வி.சேதுபதி மிகை இன்றி நடித்திருப்பது இதமாக இருக்கிறது.
வி.சே., அவசர மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோருடன் ஆம்புலன்ஸும் கதையின் ஒரு பாத்திரமாகவே மாறியிருக்கிறது.
ஒரு சில அரசு மருத்துவர்களின் அலட்சியப் போக்கு, சாமான்யர்கள் பலரும் அன்றாடம் எதிர்கொள்வதுதான். அதையும் மிகையின்றிச் சொல்லியிருக்கிறார்கள்.
காதை உறுத்தாத இசை, படத்தோடு ஒட்டிப்போகும் பாடல்கள் படத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
அழகு என்பது கதாநாயகனுக்குத் தேவையில்லை; நடிப்பு மட்டும் போதும் என்ற நம்பிக்கை சரிதான்... ஆனால் அழகில்லாத கதாநாயகியையும் படமாக்கும் துணிச்சல் வருகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
வி.சேதுபதியின் ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். இளைஞர் ஒருவர் முதியவராக மாறுவேடம் போட்டதுபோல இருக்கிறது. முகத்தில் முதுமையைக் கூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சில இடங்களில் அவர் பேசும் வசனங்களும் புரிவதில்லை. இவை போன்ற சில குறைகளைத் தேடிப்பிடித்துச் சொல்லலாமே தவிர படம் நிறைவையே தருகிறது.
படம் தன் போக்கில் நகர்கிறது. இதுபோன்ற படங்களை ரசிக்க முதலில் மக்கள் பழக வேண்டும். பெருவாரியாகப் பார்த்துப் பொருளாதார ரீதியிலும் ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்த் திரைப்படங்கள் முன்னேற்றத்தின் அடுத்த படியில் ஏற முடியும்.
ஆரஞ்சு மிட்டாய் இனிக்கிறது.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!