விமர்சனம்
காதலன் படத்தில், பெண்களை வடிவேலு வகைப்படுத்தியதைத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். மூன்று திருடர்களின் பெயர்களின் சுருக்கம் தான் தலைப்பே தவிர வேறு எதுவும் இல்லை.
ஏராளமான துக்கடா பாத்திரங்களை மாறி மாறிக் காட்டி இம்சிக்கிறார்கள். சிரிப்பை வரவழைக்க எவ்வளவோ கடுமையாகப் படக் கழுவினர் முயற்சிக்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பு. அதுவும் கதாபாத்திரங்களே சிரித்துக் கொள்(ல்)கின்றன. வெண்ணிற ஆடை மூர்த்திக்கே சவால்விடும் வகையில் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்ப உண்டு.
டிரைவராக நடிப்பவரின் கொடுமை போதாது என்று அவரது அப்பா திடீரென்று படத்தில் நுழைந்து, ஏற்கெனவே மெதுவாகப் போகும் படத்தின் வேகத்தை மேலும் மட்டுப்படுத்துகிறார். வேகமா நகர்கிறது என்று சொல்ல வேண்டுமானால் படத்தில் வரும் இரண்டு கார்களைச் சொல்லலாம். அதிலும் ஒரு கார் பாதியிலேயே வெடித்து விடுகிறது.
படம் முழுக்க மண்வாசனை உடனே பாரதிராஜா பாணிப் படமோ என்று கேட்டு விடாதீர்கள். கௌபாய் படங்களில் வருவதைப்போல வறண்ட நிலப் பரப்பின் மண்வாசனையைத்தான் சொன்னேன். மற்றபடி பெண்வாசனையே இல்லாத படம். அதாவது கதாநாயகியே இல்லை.
கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் புதுமை. மற்றபடி கோமாளித்தனத்தைத்தான் எல்லோரும் வெளிப்படுத்துகிறார்கள்.
இணையத்தில் கொஞ்ச காலம் முன் வைரலாகப் பரவிய ஹரிஹர மஹாதேவஹி புகழ் குரலை பை என்ற பாத்திரத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சென்னை திரையரங்கில் அந்தக் கரல் ஒலிக்கும்போது எல்லாம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் ஊளைச் சத்தம் கேட்கிறது. சென்னைக்கு நூறு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் திரையரங்கில் ரசிகர்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது ன்று தெரிந்து கொள்ள மறுமுறையும் இதே படத்தைப் பார்த்தேன். பை கட்சிகளின்போது நிசப்தமாக இருந்தது. ஏ சென்டர்களில் பாதிப் படம் புரியும். பி அண்ட் சி மையங்களில் படம் பெரும்பாலும் புரியாது. படத்தின் டைட்டில் கார்டே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
உகாண்டா காட்சி தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சி மிக நீளம் மற்றும் நீலம். ராதாரவி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களைக்கூட அசையும் சொத்து, அசையாச் சொத்து என்று வசனம் பேசவிட்டிருக்கிறார்கள்.
இசைப் போன்ற கல்ட் காமெடி படங்கள் தமிழுக்குப் புதிது. காட்சி அமைப்பு, அரங்க நிர்மாணம் எனப் பல புதுமைகளைத் துணிந்து இறக்கியிருக்கிறார்கள். பாராட்டித்தான் ஆக வேண்டும்! அறிமுக இயக்குநர் தீரஜ் வைத்திக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணனுக்கும் ஒரு சபாஷ்! பின்னணி இசை அமர்க்களம். சித்தார்த்தின் சென்னை சிங்காரத் தமிழ் ஷோக்கா கீது!
வெளியாவதற்கு முன்னாலேயே பிரபலமான ஷூட் தி குருவி பாடலைப் படத்தில் உரிய இடத்தில் பயன்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், திரையரங்கைவிட்டு வெளியே வந்து டூ வீலரைக் கிளப்பும் வரை, முடிந்துபோன படத்தில் ஒலிக்கவிட்டிருப்பது ஏனோ?
ஜில் ஜங் ஜக் - புதுமை, இழுவை, அறுவை!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!