முதல் பக்கம் » கின்னஸ் சுசீலா
கின்னஸ் சுசீலா
பாடும் வானம்பாடியான பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய அளவில், மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, ஐந்து முறை பெற்றவர். பத்மபூஷண், கலைமாமணி, மற்ற மாநில விருதுகள் உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார்.
ஹிந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போஷ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர் இவர். இந்தியாவின் மிகப் பெரிய இசை மேதை நௌஷாத் அலி, "அக்பர்" படத்தில் (இந்தியில் "மொகலே - ஆசம்" திரைப்படம்) அவர் பாடிய பாடலைக் கண்டு வெகுவாகப் பாராட்டியது பல பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு புகழ் சேர்த்தது.
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா. இசை அரசர் டி.எம்.சவுந்தர்ராஜன் உடன் அதிக பாடல்கள் பாடியிருக்கிறார்.
பழம்பெரும் நடிகைகளான சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கதாநாயிகளுக்கு 100 படங்களுக்கு மேல் பாடிய பெருமை பெற்றவர் பி.சுசீலா.
சுசீலாவும்... விருதும்...
1.1969 ஆம் ஆண்டு நாளை இந்த வேளை பார்த்து என்ற உயர்ந்த மனிதன் திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
2.1972 ஆம் ஆண்டு சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்ற சவாலே சமாளி திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
3. 1977 ஆம் ஆண்டு ஜும்மடி நாதம் சய்யனி பாதம் என்ற சிரி சிரி முவ்வா தெலுங்கு திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
4. 1983 ஆம் ஆண்டு ஆகுலோ ஆகுனை என்ற மேக சந்தேசம் தெலுங்கு பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
5. 1984 ஆம் ஆண்டு எம் எல் ஏ ஏடுகொண்டலு என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
6. சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதினை மூன்று முறை பெற்றுள்ளார்.
7. சிறந்த பாடகிக்கான கேரள அரசின் விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார்.
8. சிறந்த பாடகிக்கான ஆந்திர அரசின் விருதினை ஏழு முறை பெற்றுள்ளார்.
9. 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.